×

கூடலூர், கம்பம், வருசநாடு, மேகமலையில் தீபாவளிக்கு களைகட்டிய மான்கறி விற்பனை

தேனி, நவ. 1: மேகமலையில் வனத்தை பாதுகாக்க போதிய அளவு அதிகாரிகள் இல்லாததால், மரம் கடத்தலும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு பரவலாக மான்கறி விற்பனையானதாக வனத்துறை அதிகாரிகளே தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மேகமலை வனப்பகுதி பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு இணையான மிகப்பரந்த வளமான வனப்பகுதி. இங்கு உற்பத்தியாகும் வைகை நதி மூலம் ஒரு கோடி மக்கள் தாகம் தீர்கிறது. பல லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாய சாகுபடி நடக்கிறது.

இங்குள்ள வனத்தில் முறைகேடுகள் நடந்ததை அறிந்த வனத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆறு வனத்துறை ரேஞ்சர்களை இடமாற்றம் செய்தனர். இதில் வருசநாடு, கூடலூர், சின்னமனூர் ரேஞ்சர்கள் பணியிட்ஙகள் இன்னும் நிரப்பப்படவில்லை. இந்த இடங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளன.
 சில வன மாபியாக்கள் தங்களுக்கு தேவையான, தங்களுக்கு மிகவும் உதவும் வகையில் உள்ள அதிகாரிகளை கொண்டு வரவே, இந்த பகுதியில் இன்னும் ரேஞ்சர்களை நியமிக்கவிடாமல் தங்கள் செல்வாக்கினால் தடை போட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் ரேஞ்சர்கள் இல்லாததால், மரம் கடத்தலும், வனவிலங்குகள் வேட்டையும் தாராளமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு கூடலூர், கம்பம், வருசநாடு, மேகமலை உட்பட பல்வேறு பகுதிகளில் மான்கறி விற்பனை நடந்துள்ளது. இதுகுறித்து அரசுக்கு தகவல் கொடுத்துள்ளோம். மிகவும் திறமை வாய்ந்த அதிகாரிகள் இதற்கு முன்பு பணிபுரிந்தனர். இதனால் மேகமலை பாதுகாக்கப்பட்டது. இடையில் சில காலம் தவறான அதிகாரிகள் நியமிக்கப்பட்டதால், மேகமலையின் வளம் பெருமளவு சூறையாடப்பட்டு விட்டது. இனிமேலும் அரசு காலம் தாழ்த்தாமல், மிகவும் நேர்மையான அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே இப்பிரச்னை முடிவுக்கு வரும். வனமாபியாக்களை மீறி பணியாற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை. இவ்வாறு கூறினர்.

 இது குறித்து மேகமலை வார்டன் போஸ்லே சச்சின் துக்கரெவிடம் கேட்ட போது,  `` மரம் கடத்தல், வனவிலங்கு வேட்டை நடந்துள்ளது குறித்து எனக்கு தகவல் வந்தது. நாங்கள் புதியதாக ரோந்துப்படையினைரை நியமித்து, கடுமையாக ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம். ரோந்து தொடங்கிய பின்னர் எந்த வேட்டையும், மரம் கடத்தலும் நடக்கவில்லை. மிகவும் நேர்மையான ரேஞ்சரை நியமிக்க வேண்டும் என நாங்கள் அரசுக்கு பரிந்துரைத்து உள்ளோம்’’ என்று கூறினார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `` வருசநாடு பகுதியில் பல கிராமங்கள் வனத்திற்குள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். இவர்களை வெளியேற்றுவதில் மட்டுமே வனத்துறை ஆர்வம் காட்டுகிறது. இந்த மக்களையே பயன்படுத்தி வனக்குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மக்களும் வெளியேறி விட்டால் வனம் திறந்தவெளி காடாக மாறி விடும்.

எனவே, பல தலைமுறைகளாக வசிக்கும் கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையினை நிறுத்தி வைத்து, மேகமலையில் தற்போது நடக்கும் ஆக்கிரமிப்புகளை தடுப்பதில் வனத்துறை ஆர்வம் காட்ட வேண்டும். இதற்கு கிராம மக்கள் துணையாக இருக்க தயாராக உள்ளனர். தற்போதைய உடனடி தேவை நேர்மையான அதிகாரிகள் மட்டுமே. மூன்று ரேஞ்சர்கள் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. அந்த ரேஞ்சர் பணியிடங்களில் தரமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த  மாவட்டத்தில் மேகமலை பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பாதுகாக்கப்படும்’’ என்று கூறினர்.

Tags : Cuddalore ,Kambam ,Megamalai ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை