×

வைகை அணையில் மேல் மதகு திறக்காததால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

தேனி, நவ. 1: வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரினை ராட்சத மதகுகளிருந்து திறந்து விடாததால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக வைகை அணை உள்ளது. இங்கு வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், பள்ளி, கல்லூரிகளுக்கான பருவ கால விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவருவதற்காகவே அணையில் இருந்து வெளியேறும் ஆற்றின் தெற்கு பகுதியிலும், வடக்கு பகுதியிலும் சிறுவர் பூங்காக்கள் உள்ளன.

கலைநயத்துடன் கூடிய பூங்காவைக் காண தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் தேனி மாவட்டத்தில் உள்ள காட்டாற்று ஓடைகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதன்படி, வைகை அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 49 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 63.78 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1 ஆயிரத்து 560 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திறந்து விடப்பட்டுள்ள நீரானது அணையின் கீழ்பகுதி மதகுகளான 7 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேல்மதகுகளான பெரிய கண் எனப்படும் ராட்சத மதகுகளை சிறிய அளவில் திறந்தால் மேலேயிருந்து தண்ணீர் வழிந்தோடி வருவதை பார்க்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகஅளவில் வரும். தற்போது அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்ட செய்தியறிந்து மேல் ராட்சத மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்திருப்பார்கள் என எண்ணி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரியமதகுகளை திறக்காமல் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் செல்வதை பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் வார விடுமுறை நாட்களில் திறக்கப்படும் 1500 கனஅடி நீர் அளவிற்கு பெரியமதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Vaigai Dam ,public ,
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு