×

போடி அருகே இடிந்து விழும் அபாயத்தில் ஆதிதிராவிடர் காலனி வீடுகள்

போடி,நவ.1: போடி அருகே ஆதிதிராவிடர் காலனி தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கீழசொக்கநாதபுரம் கிராமத்தில் ஆதிராவிடர் காலனி உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. ஆதிதிராவிட மக்கள் இங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த வீடுகள் கட்டி 40 ஆண்டுகளைக் கடந்து விட்டது. இதனால் ஒவ்வொரு வீட்டின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே எலும்பு கூடுபோல காட்சி தருகிறது. மழைக்காலங்களில் வீட்டின் உள்ளே ஒழுகுவதால் கம்பிகளும் துருப்பிடித்து   மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்து மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் காலனி மக்கள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்று கூறப்படுகிறது.

தற்போது கனமழை பெய்து வருவதால் காலனி வீடுகள் இடிந்து விழும் என்ற பயத்துடன் மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, உடனடியாக அதிகாரிகள் இந்த வீடுகளை  ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காலனி மக்கள் கூறுகையில், `` அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு  வீடுகளில் சிமெண்ட் பூச்சு சுவர்களிலும் மேற்கூரையிலும் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது. தொடர் மழையால் மேற்கூரையே இடிந்து விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து எங்கள் பாதுகாப்பிற்கு வழிவகை ஏற்படுத்திட வேண்டும்’’ என்று கூறினர்.

Tags : colony houses ,Bodi ,
× RELATED பொன்னை அருகே ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி விளையாடும் சிறுவர்கள்