×

உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் மூடியே கிடக்கும் ஸ்கேன் அறை தனியார் மருத்துவமனைகளை நோக்கி கர்ப்பிணிகள் விரட்டியடிப்பு

உத்தமபாளையம், நவ.1: உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் ஸ்ேகன் அறை மூடியே கிடக்கிறது. ஸ்கேன் எடுக்க வரும் கர்ப்பிணிகள் விரட்டியடிக்கப்படும் அவலம் தொடர்கிறது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனை கடந்த 1921ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் பெரியகுளத்திற்கு அடுத்தபடியாக பெரிய ஆஸ்பத்திரி என பெயரெடுத்த இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி, சின்னஓவுலாபுரம், மார்க்கயன்கோட்டை, உ.அம்மாபட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வெளிநோயாளிகளாக மட்டும் 1000 முதல் 1200 நோயாளிகள் வருகின்றனர்.

உள்நோயாளிகள் பிரிவில் 72 பெட் வசதி உள்ளது. ஆனால், மருத்துவர்கள் எண்ணிக்கை காலத்திற்கேற்ப அதிகரிக்கப்படாத நிலை தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக தலைமை மருத்துவ அதிகாரியுடன் சேர்த்து 6 பணி மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் யாரும் இல்லை. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு பிரசவம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வரை நடந்தது. மாதந்தோறும் 60 முதல் 70 பிரசவங்களும், சிசேரியன் என 20 முதல் 25 வரை நடந்தது.

தற்போது கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வந்தால் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கோ, கம்பம் அரசுமருத்துவமனைக்கோ விரட்டியடிக்கும் நிலை தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக  உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் மகப்பேறு பெண் டாக்டர் (எம்.டி, டிஜிஓ) இல்லை.  இதனால் கர்ப்பம் அடைந்த பெண்களின் சிரமங்கள் தொடர்கதையாகி வருகிறது.

கர்ப்பம் தரித்தவுடன் 3 ஸ்கேன்கள் பெண் டாக்டர்களால் பரிசோதனை செய்யப்படும். முதல்நிலை ஆரம்ப வாரங்களிலும், இதன்பின்பு 5வது மாதம், தொடர்ந்து 8வது மாதங்களில் கருவில் உருவாகி உள்ள பெண் சிசுவின் துடிப்பு, இதயசெயல்பாடு, உள்ளுருப்புகளின் செயல்பாடுகள், நீர்சத்து, கருவின் வளர்ச்சி, உடல் உறுப்புகளில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கிறதா என்பதை ஸ்கேன் மூலம்தான் பார்க்கமுடியும்.

ஆனால் தாலுகா அந்தஸ்தில் மருத்துவமனை இருந்தும் இல்லாத நிலையாக கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்லும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது குறைந்து வருகிறது. மாதத்தில் 80 பிரசவம் பார்க்கப்பட்டு வந்த நிலையில் சுகப்பிரசவமாக மட்டும் 10 முதல் 15 வரையே நடக்கிறது. இதனால் இந்த மருத்துவமனை கர்ப்பிணிகளுக்கான மருத்துவமனையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பார்க்காத நிலையில் இந்த அறை பூட்டியே கிடக்கிறது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள  ஸ்கேன் மிஷின் பழுதடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்பு வாரத்தில் இரண்டு நாள் பார்க்கப்பட்ட ஸ்கேன் இன்று சுத்தமாக பார்க்காத நிலையில் உள்ளளது. கர்ப்பிணிகளுக்கு போடப்படும் சத்துஊசி, மருந்துகள், மாத்திரைகள், இவர்களது தொடர் கவனிப்பு போன்றவையும் கேட்பாரற்று கிடக்கிறது. எனவே, தேனி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணைஇயக்குநர் உடனடியாக இம்மருத்துவமனையை ஆய்வு செய்து நடவடிக்கை  எடுக்க வேண்டும். கர்ப்பிணிகள் படும் திண்டாட்டத்தை போக்க முன் வரவேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கவனிப்பாரா கலெக்டர்?
இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. நோயாளிகள் வருகின்ற விகிதாச்சாரப்படியே குறைந்தது 12 டாக்டர்கள் பணியில் இருக்கவேண்டும். தற்போது பணியில் இருப்பது 6 டாக்டர்கள்தான். அதிலும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை, இதய நோயாளிகள், சுகர் நோயாளிகளுக்கான சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை எட்டாக்கனியாகி விட்டது. இதில் கர்ப்பிணிகளை ஸ்கேன் பார்க்காமல் கூட விரட்டியடித்தால் எங்கு செல்வார்கள். எனவே பெண் மருத்துவர்(டி.ஜி.ஓ) உடனடியாக நியமிக்கப்படவேண்டும். கர்ப்பிணிகளுக்கான பிரசவம் நடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே, டெபுடேசன் டாக்டரையாவது நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கர்ப்பிணி பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : women ,hospital ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது