×

இடிந்து விழும் அபாயத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடம் உயிர்பயத்தில் மாணவர்கள்

காரைக்குடி, நவ. 1: காரைக்குடி அருகே பேயன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் அபத்தான நிலையில் உள்ளதால் மாணவர்களை அனுப்ப மறுத்து பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியம் கோவிலூர் ஊராட்சிக்கு உட்பட்டது பேயன்பட்டி கிராமம். இங்கு 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு என கடந்த 70 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அதன்பின்னர் 2009-2010ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ஒரு தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் என 5 பேர் பணியாற்றுகின்றனர். இப் பள்ளியில் பேயன்பட்டி, ஓ.சிறுவயல் ஜீவாநகர், ராஜீவ்காந்தி நகர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 111 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2010-2011ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ரூ.10.25 லட்சத்தில் மூன்று வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இக் கட்டிடம் முறையாக கட்டப்படாததால் மேற்கூறை முழுவதும் பெயர்ந்து மழைக்கு தண்ணீர் ஒழுகும் நிலை உள்ளது. தவிர தரைதளம் முழுவதும் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் மிகவும் பழுதான நிலையில் உள்ள இரண்டு வகுப்பறையை பயன்படுத்தாமல், ஓரளவு நன்றாக உள்ள வகுப்பறையில் அனைத்து மாணவர்களையும் அமரவைத்து பாடம் சொல்லி தர வேண்டிய அவலநிலை உள்ளது. வகுப்பறை கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உடையும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பயத்துடனே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளியின் நிலை குறித்து கலெக்டர், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தொடர் மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெற்றோர்கள் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் அழகப்பன் கூறுகையில், ‘இப் பள்ளியில் எல்கேஜி முதல் 8ம் வகுப்புவரை 111 பேர் தற்போது படிக்கின்றனர். 114 பேர்சேர்ந்த நிலையில் பள்ளிக்கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் 3 பேர் டி.சி. வாங்கி சென்றுவிட்டனர். பள்ளியின் கட்டுமான பணி முறையாக இல்லாததால் மேற்கூரை மிகவும் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்து உள்ளது. அதேபோல் தரைத்தளம் உடைந்து போய் மாணவர்கள் அமர கூட முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயன்இல்லை.

ஊர் பொதுமக்கள் கூறுகையில், ‘அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறைந்து வரும் நிலையில். நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அனைத்து குழந்தைகளையும் சேர்ந்ததுள்ளோம். ஆனால் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி இல்லை. கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது. பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு பயத்துடன் இருக்கிறோம். பள்ளியை மராமத்து செய்யக்கோரி கலெக்டர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கு மனு கொடுத்து பயனில்லை. ஒவ்வொரு சம்பவத்துக்கும் உயிர் பலிக்கு பின்பு சுதாரிக்கும் அரசு இதில் உரிய அக்கறை காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : collapse ,Government Middle School ,
× RELATED கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள் தலைமை ஆசிரியை, ஆசிரியை சஸ்பெண்ட்