×

சாயல்குடி பகுதியில் ஆடுகளை குறிவைத்து திருடும் மர்ம கும்பல்

சாயல்குடி, நவ.1:  சாயல்குடி பகுதியில் விவசாயம், பனைமரத்தொழில் நடந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக போதிய மழையின்றி விவசாயம் பொய்த்து போய் விட்டது. பனை மரத்தொழிலும் நலிவடைந்து விட்டது. மாற்றுத்தொழில் தெரியாத இப்பகுதியினர் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு ஏற்ற இயற்கை தீவனங்கள் இன்றி பல்வேறு சிரமங்களுடன் வளர்த்து வந்தனர். பருவ காலத்திற்கேற்றவாறு விலைக்கு விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். கிராமங்களில் ஆடுகளை கட்டி போடாமல், வீட்டிற்கு முன் அடையபோடுவது வழக்கம். இதனை பயன்படுத்தி, கடந்த சில நாட்களாக நரிப்பையூர், வெள்ளப்பட்டி உள்ளிட்ட  சாலையோரங்களில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் ஆடு திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஜெயபால், லட்சுமி ஆகியோர் கூறுகையில், நரிப்பையூர், வெள்ளப்பட்டியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் இருக்கும் வீடுகளுக்கு முன் படுத்து கிடந்த 6 ஆடுகளை காணவில்லை. நள்ளிரவில் வரும் மர்ம நபர்கள் குண்டுகட்டாக தூக்கி, வாகனங்களில் கடத்தி சென்றுள்ளனர். இதுபோன்று தொடர்ச்சியாக சாலை மார்க்கத்தில் இருக்கும் கடுகு சந்தைசத்திரம் போன்ற சில கிராமங்களிலும் ஆடுகள் காணாமல் போய் வருவது தொடர்கிறது. எனவே ஆடு கடத்தி வரும் கும்பலை பிடிக்க எஸ்.பி தனிப்படை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sayalgudi ,area ,
× RELATED மணமேல்குடி அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி