×

ஆக்கிரமிப்பை அகற்றுவதில் மெத்தனம் வீடு,அரசு கட்டிடங்களுக்குள் புகுந்த மழைநீர் அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

சாயல்குடி, நவ.1:  கடலாடியில் பெய்த கன மழைக்கு தண்ணீர் வீடு, அரசு கட்டிடங்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பலமுறை மனு அளித்தும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டி வருவதே காரணம் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடலாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. இதனால் கடலாடி-முதுகுளத்தூர் சாலையின் ஓரம் உள்ள தேவர் நகர், சேது நகர் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியிலுள்ள வீடுகள், கால்நடை மருத்துவமனை, மின்சார வாரியம் அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பெருகி ஓட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.

தேவர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நீர்வழிந்தோடும் சாலையோர கால்வாய், மடை போன்றவற்றை ஆக்கிரமித்து ஆக்கிரமிப்புகள் உள்ளதால் தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. வீடுகள் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

மின்வாரிய அலுவலகத்தில் தண்ணீர் புகுந்து ஓட வழியில்லாமல் தேங்கி கிடப்பதால் மின் பணிகளை செய்ய முடியாமல் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மின் பழுது ஏற்பட்டு வருகிறது. அதற்கு இங்கு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மின் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், கிராமங்கள் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் தண்ணீர் தேங்கி சிகிச்சை அளிக்கும் கட்டிடங்களுக்கு தண்ணீர் புகுந்ததால், மருத்துவர், உதவியாளர் செல்ல முடியாமல் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு சாலையோரத்தில் நின்று சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும் பழை சுற்றுச்சுவரை சுற்றி மழைநீர் தேங்கி நின்றதால் இடிந்து விழுந்தது. கடலாடியில் சர்ச் தெரு, சந்தன மாரியம்மன் கோயில் தெரு, இந்திரா நகர் காலனி ஆகிய தெருக்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழை பெய்யும் காலங்களில் இதன் வழியே ஓடி வரும் தெருத்தண்ணீர் பூதங்குடி கண்மாயில் சேருவது வழக்கம். தண்ணீர் வழிந்தோடும், அவ்வழியை தனியார் சிலர் ஆக்கிரமித்தும், சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்களை கட்டியுள்ளதால் தற்போது பெய்து வரும் மழைக்கு தண்ணீர் ஓட வழியில்லாமல், அத்தெரு வீடுகள் மற்றும் யூனியன் அலுவலகம் அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் தெருக்களில் தண்ணீர் பெருகி கிடப்பதால் கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற விஷ காய்ச்சல்களும் பரவி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,  கடலாடி-முதுகுளத்தூர் சாலையோரம் செல்லும் கால்வாயின் மீது சிலர் அரசு புறம்போக்கு இடம், நெடுஞ்சாலை துறை இடம் போன்றவற்றை ஆக்கிரமித்து கம்பி வேலிகளை அமைத்து மண் அடித்து நிலத்தை உயர்த்தியும் சுற்றுச்சுவர்களை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கால்வாய் காணாமல் போய் விட்டதால், மழை தண்ணீர் ஓட வழியில்லாமல் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் புகுந்தும், தெருக்களில் பெருகியும் கிடக்கிறது. இதனால் டெங்கு, சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவி வருகிறது. குப்பை, பழைய துணி போன்றவை சேர்ந்து தண்ணீரில் கிடப்பதால், அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. இதுகுறித்து தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுகின்றனர். எனவே கலெக்டர் கடலாடியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிரந்தரமாக மழை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

Tags : rainwater bureaucrats ,house ,government ,buildings ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்