×

தைப்பூச திருவிழாவிற்கு பழநிக்கு சிறப்பு ரயில் ரயில் பயன்படுத்துவோர் சங்கம் கோரிக்கை

பழநி, நவ. 1: தைப்பூச திருவிழாவிற்கு பழநிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர். இவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் பாதயாத்திரையாகவே வருவர். பின்னர் அவர்கள் ஊர் திரும்புவதற்கு பஸ் மற்றும் ரயில் போன்றவை கிடைக்காமல் அல்லல்படுவது ஆண்டுதோறும் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் தைப்பூச திருவிழாவிற்கு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் மத்திய ரயில்வேதுறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘வரும் கார்த்திகை மாதம் முதல் ஐயப்ப பக்தர்கள் சீசன், கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விழாக்கள் நடைபெறும். பின், தை மாதத்தில் தைப்பூச திருவிழா, பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், அதன்பிறகு கோடைவிடுமுறை என அக்டோபர் மாதம் துவங்கி மே மாதம் வரை பழநி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக பஸ், ரயில் போன்றவை கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, திருவிழா காலங்களை முன்னிட்டு அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags : Train Train Users Association ,festival ,
× RELATED ரக்சாபந்தன் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து