கந்த சஷ்டி விழா பழநி கோயிலில் நாளை சூரசம்ஹாரம்

பழநி, நவ. 1: பழநி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி. இவ்விழா கடந்த அக்.28ம் தேதி மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (சனி) நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அதிகாலை 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கோயிலில் சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதன்பின்பு சன்னதி நடை அடைக்கப்படும்.

மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும். நாளை மறுதினம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். - சூரசம்ஹாரத்தையொட்டி நாளை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படவுள்ளது. சூரசம்ஹாரத்தை காண கிரிவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால் அடிவார பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் ஜெயசந்திரபானுரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Tags : Kanda Sashti Festival ,Palani Temple ,
× RELATED பழநி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு...