×

காணொளி காட்சியில் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு

திருக்காட்டுப்பள்ளி, நவ. 1: பூதலூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ரயிவே நிலையம் அருகில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு திருவையாறு மற்றும் தஞ்சை தாலுகாக்களில் இருந்தும் சில கிராமங்கள் சேர்த்து பூதலூர் பிரிக்கப்பட்டு தனி தாலுகாவானது.

இதையடுத்து தாலுகா அலுவலக புதிய கட்டிடம் 2016ல் பூதலூர் வடக்கு பகுதியில் கட்டப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அலுவலக பணிகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்காக தாலுகா அலுவலகம் அருகிலேயே மாவட்ட நிர்வாகத்தால் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் கட்டுவதற்காக ரூ.2 கோடியே 80 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. புதிய பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தரைதளத்தில் ஒன்றிய ஆணையர் அலுவலக அறை, ஒன்றிய குழு தலைவர் அறை, மீட்டிங் ஹால் மற்றும் ஒன்றிய பல்வேறு பிரிவு பணி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்தளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அலுவலக அறை, பொறியாளர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதே நேரத்தில் பூதலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அண்ணாத்துரை தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றினார். திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட அலுவலர் பழனி, ஒன்றிய ஆணையர் காந்தரூபன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கணேசன், தாசில்தார் சிவகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் மணிமேகலை, காமராஜ், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா, திருவையாறு நிலவள வங்கி துணைத்தலைவர் கலியமூர்த்தி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : office building ,Panadura ,
× RELATED நூறாண்டுகளை கடக்கும் பாளை மண்டல...