×

தென்னக கேம்பிரிட்ஜ் என அழைக்கப்படும் குடந்தை அரசு கல்லூரி பழங்காலத்து கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் மாணவர்கள் வலியுறுத்தல்

கும்பகோணம், நவ. 1: தென்னக கேம்பிரிட்ஜ் என அழைக்கப்படும் கும்பகோணம் அரசு கல்லூரியின் பழங்காலத்து கட்டிடங்களை விரைந்து சீரமைக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர். கும்பகோணத்தில் தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் எனும் அரசு ஆடவர் கல்லூரி இயங்கி வருகிறது. 1854ம் ஆண்டில் கும்பகோணத்தில் ஒரு மாகாண பள்ளியாக நிறுவப்பட்டு பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற வில்லியம் ஆர்தர் போர்ட்டர் மற்றும் டி.கோபால்ராவ் ஆகிய கல்வியாளர்கள் முயற்சியால் 1867ல் அரசு கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் தேம்ஸ் நதிக்கரையில் கேம்பிரிட்ஜ் கல்லூரி எப்படி அமைந்துள்ளதோ, அதே போல் கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டது.

கேம்பிரிட்ஜ் கல்லூரி போன்று கும்பகோணம் கல்லூரியின் கட்டிட முகப்பும் வடிவமைக்கப்பட்டது. தேம்ஸ் நதிக்கரையில் பாலம் உள்ளது போல் காவிரியிலும் பாலமும், போட் கிளப்பும் அமைக்கப்பட்டது. இரண்டு கல்லூரியின் கட்டுமான வடிவமைப்பும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டது. அதனால் தான் தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என அழைக்கப்பட்டது. போட் கிளப் (படகு சவாரி) தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான் இருந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கல்லூரியில் போதுமான பராமரிப்பு செய்யாததால் நூற்றாண்டு பழமையான கட்டிடங்களின் மேற்கூரைகள், ஓடுகள் உடைந்து கீழே விழுந்து வருகிறது.

மேலும் கட்டிடங்களின்மேல் மரம், செடி கொடிகள் முளைத்துள்ளது. தற்போது மழைகாலம் என்பதால் கட்டிடத்தி–்ன் பக்கவாட்டு சுவர்கள், ஓடுகளிலிருந்து கற்கள் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் மாணவர்கள், பேராசிரியர்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. காவிரி ஆற்றின் பாலத்தின் வழியாக சென்றால் பழங்காலத்து கட்டிடத்தின் உள்ளே புகுந்து கல்லூரி வகுப்பறைக்கு செல்லலாம். இந்த பாதை வழியாக கல்லூரியில் படிக்கும் 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வரும் நிலையில் ஓடுகள் உடைந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும். எனவே கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் உள்ள பழங்காலத்து கட்டிடத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : buildings ,Kundantai ,South Cambridge ,Government College ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...