×

பெரியார் காலனி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தண்ணீர் தேக்கம்

உடுமலை, நவ. 1: பெரியார் காலனி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவது தொடர்பாக சண்முகசுந்தரம் எம்.பி. நேற்று நேரில் ஆய்வு செய்தார். உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கண்ணமநாயக்கனூர் செல்லும் சாலையில், 9வது வார்டு பெரியார் காலனியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையை கடந்துதான், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், இந்த சுரங்கப்பாதையில் அடிக்கடி கழிவுநீர் தேங்கிவிடுகிறது. மேலும், மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து சுரங்கப்பாதை நிறைந்து காணப்படும். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், தற்போது பெய்துவரும் மழை காரணமாக, சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பொள்ளாச்சி எம்பி., சண்முகசுந்தரம் நேற்று சுரங்கப்பாதையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் ரயில்வே அதிகாரிகள், நகர செயலாளர் மத்தின், முன்னாள் கவுன்சிலர் கிருபானந்தன், திமுக நிர்வாகிகள் கதிரேசன், ரவி, ஆனந்தன், ஆறுமுகம் உள்ளிட்டோர் சென்றனர்.
தண்ணீர் தேங்காமல் சீரமைப்பது பற்றி அதிகாரிகளுடன் எம்.பி. ஆலோசனை நடத்தினார். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என உறுதி அளித்தார். இதற்கிடையில், எம்.பி. ஆய்வுக்கு வருவதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் நேற்று அவசரம் அவசரமாக தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தினர். இருப்பினும் முழுவதுமாக அப்புறப்படுத்த முடியவில்லை. எம்.பி. ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர்கள் யாரும் வராமல் புறக்கணித்தனர்.

Tags : Rainwater Harvesting ,Periyar Colony Railway Tunnel ,
× RELATED மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி