×

உரக்கிடங்கை இடமாற்ற கோரி மக்கள் முற்றுகை போராட்டம்

ஈரோடு, நவ.1: ஈரோடு சூரம்பட்டி வலசில் புதிதாக அமைக்கப்பட்ட மாநகராட்சி உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரி அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஈரோடு மாநகராட்சி 3ம் மண்டலத்திற்கு உட்பட்ட 40வது வார்டு சூரம்பட்டி வலசு வ.உ.சி. வீதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் கடந்த 3 மாதத்திற்கு முன்பு குடியிருப்புகளுக்கு மத்தியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரித்து உரமாக்கும் கிடங்கு அமைக்கப்பட்டது.  இந்த கிடங்கில் இருந்து வெளியேறும் புகையினால் மூச்சுதிணறலும், அதேபோல் துர்நாற்றமும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனால், இந்த உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கடந்த
மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிகாரிகள் உரக்கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசாமலும், புகையால் பாதிப்பு ஏற்படாதவாறும் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தனர். ஆனால், தொடர்ந்து அதே பாதிப்பு இருந்து வந்ததால், நேற்று காலை மாநகராட்சி உரக்கிடங்கை அப்பகுதி மக்கள்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாநகராட்சி 3ம் மண்டல உதவி கமிஷனர் விஜயா சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், உரக்கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கிடங்கை இடம் மாற்றம் செய்ய உயர்அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை நடத்தி விரைவில் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என தெரிவித்தார். இதனால் சமாதானம் அடைந்த மக்கள், போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : blockade protest ,relocation ,
× RELATED எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் இடமாற்றம்