×

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் திறந்தவெளி கிணறு மூடப்பட்டது

வேதாரண்யம், நவ.1: வேதாரண்யம் நகராட்சி பகுதியில் திறந்தவெளி கிணற்றை புகார் வந்த 4 மணிநேரத்தில் நகராட்சி அதிகாரிகள் பொக்லின் இயந்திரம் மூலம் மணல் கொட்டி மூடினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்குழாய் கிணற்றில் சிறுவன் சுர்ஜித் விழுந்து உயிரிழந்தான். இச்சம்பவத்தையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகளையும், திறந்தவெளி கிணறுகளையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி வடகட்டளை பகுதியில் சாலைஓரத்தில் திறந்தவெளி கிணறு இருப்பதாகவும், அவ்வழியேசெல்லும் பொதுமக்கள் அதில் தவறி விழவாய்ப்புள்ளது எனவும், அதனை உடனே மூடவேண்டும் எனவும் பொதுமக்கள் நலன் கருதி கருப்பம்புலம் உதவிபெறும் ஞானம்பிகா உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சித்திரவேலு பொதுமக்கள் நலன் கருதி வாட்ஸ்ஆப்பில் தகவல் வெளியிட்டார். இதையொட்டி வேதாரண்யம் தாசில்தார் சண்முகம், வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் முகமது இப்ராஹீம் மேலாளர் மீராமன்சூர், நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் கோமதிநாயகம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு தகவல் வந்த நான்குமணி நேரத்தில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மணல் கொட்டி பயன்படாத திறந்தவெளி கிணற்றை மூடினர். உடனடி நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்திற்கு வாட்சப் மூலமும், தொலைபேசி மூலமும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : municipality ,Vedaranyam ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை