×

சீர்காழியில் தொடர் மழையால் குளம், ஏரிகள் நிரம்பியது மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மக்களிடம் ஆன்லைனில் கருத்து கேட்பு

மயிலாடுதுறை, நவ.1: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க மயிலாடுதுறை பொதுமக்களிடம் நகராட்சி நிர்வாகம் ஆன்லைன் வழியாக கருத்து கேட்பு நடத்துகிறது. இந்த கருத்துக் கேட்பு குறித்து மயிலாடுதுறை நகராட்சி தகவல் பலகையில் வெளியிட்டிருப்பதாவது: மயிலாடுதுறையில் மணக்குடி கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வருகிற நவம்பர் 22ம் தேதி வரை தெரிவிக்கலாம் என நகராட்சி சார்பில் இணையதளம் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் 1964ம் ஆண்டு 1.95 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிளாஷ் பேருந்து நிலையம் ஆகும். அப்போது பேருந்து நிலையத்திற்கு மிக குறைவான பேருந்துகள் வந்து சென்றன. இதனால் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. நாளடைவில் பேருந்து மற்றும் இதர வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்ததால் மயிலாடுதுறை பேருந்து நிலையம் மற்றும் அதை ஒட்டியுள்ள பிரதான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்கும் என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து மயிலாடுதுறை அடுத்துள்ள மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13.77 ஏக்கர் நிலத்தில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க நகர்மன்றத் தீர்மானம் எண் 9. நாள் 28.11.2014ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த நிலம் ரூ.1.60 கோடிக்கு நகராட்சி மூலம் வாங்கப்பட்டு அது நகராட்சி பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம்தேதி அரசாணை எண் 75. ஒன்றை வெளியிட்டது, அதில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் ரூ.38.05 கோடி மதிப்பில் கட்ட அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியை தொடங்க பொதுமக்களிடமிருந்து ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை பெறுமாறு நகராட்சி ஆணையருக்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு, கையகப்படுத்திய நிலம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அமைப்பது தொடர்பான அறிவிப்பை நகராட்சி இணையதளத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் வருகிற நவம்பர் மாதம் 22ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவித்த பிறகு பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : lakes ,Sirkazhi ,Mayiladuthurai ,
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...