×

குளித்தலையில் மீண்டும் அரசு பேருந்து சிறைபிடிப்பு

குளித்தலை, நவ. 1: கரூர் மாவட்டம் குளித்தலை பொதுமக்கள், இளைஞர்கள் கூட்டமைப்பினர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் வரை செல்லும் அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி விட வேண்டும். இடைநில்லா பேருந்தை தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என பல கட்டமாக போராட்டம் நடத்தி வந்தனர். இறுதியாக சமீபத்தில் குளித்தலை பஸ் நிலையம் வராத அரசு பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் எனும் அறிவிப்பு விடுத்து களத்தில் இறங்கினர்.

அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இடைநில்லா பேருந்து தவிர அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்பு பலகை திருச்சி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளில் வைக்கப்படும் என உறுதியளித்தனர். அதனால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் முதல் கட்டமாக இரு தினங்களுக்கு முன் சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருந்தபோது திருச்சியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் குளிர்சாதன பேருந்து குளித்தலை வழியாக செல்லும் என பெயர் பலகை வைத்ததால் பயணிகளுக்கும், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியாக போலீசார் சமரசத்தால் அரசு பேருந்து விடுவிக்கப்பட்டது இந்நிலையில் நேற்று மாலை குளித்தலை அண்ணா நகர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் குடும்பத்தினருடன் குழந்தைக்கு மருத்துவம் பார்த்துவிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள ஐயப்பன் கோவில் முன்பு திருச்சியில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி உள்ளார். அப்போது பேருந்து நடத்துனர் குளித்தலை நிற்காது என கூறிவிட்டு பயணிகளை ஏற விடாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரதீப் குளித்தலை நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து அதன் பிறகு பின்னால் வந்த அரசு பேருந்தில் பயணம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரை ஏற்றாமல் தவிர்த்து வந்த திருச்சி திருப்பூர் அரசு பேருந்து குளித்தலை பஸ் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது பொதுமக்கள் இளைஞர்கள் கூட்டமைப்பினர் ஏராளமானோர் ஒன்றுசேர்ந்து இரண்டாவது முறையாக அரசு பேருந்தை சிறைபிடித்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது நடத்துனர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் டிக்கெட் பரிசோதகர் அவருக்கு மெமோ ஒன்றை அனுப்பிவைத்து இவர் பணியாற்றும் கிளை மேலாளரிடமும் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அப்போது இளைஞர்கள் இச்சம்பவம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது போக்குவரத்துத் துறை அமைச்சரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் இடைநில்லா பேருந்து தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பஸ் நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் சிறைபிடிப்பு போராட்டம் நடைபெறும் என எச்சரித்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...