×

வெங்கடேஸ்வரா நகரில் சாக்கடை வடிகால் பணி பாதியில் நின்றதால் கழிவு நீர் தேக்கம்

கரூர், நவ. 1: கரூர் வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதியில் சாக்கடை வடிகால் பாதியில் நிறுத்தப்பட்டதால் கழிவு நீர் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்துள்ளதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் எம்ஜிஆர் நகர்ப்பகுதிகளில் இருந்து வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதிகள் மற்றும் சவுரிமுடித்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாக்கடை வடிகால்களை ஒன்றாக இணைக்கும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் இருந்து அரைகுறையாக கட்டப்பட்டுள்ள சாக்கடை வடிகால் வெளியேற்றப்பட்டு வரும் கழிவுகள் அனைத்தும் அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் சாலையில் கலந்து அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்கிறது. கழிவு நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதால் கடும் துர்நாற்றம் உட்பட தொற்று நோய் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த பணியை முழுமையாக முடித்து, கழிவு நீர் வெளியேறாத வகையில் பணிகளை துவங்க வேண்டும் என இந்த பகுதியினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், செவி சாய்க்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இந்த கழிவு நீர் வெளியேறுவதால் பல்வேறு தொந்தரவுகளை இந்த பகுதியை சுற்றிலும் குடியிருப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர். அசாதாரணமான நிலையை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, கழிவு நீர் வெளியேறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : city ,Venkateswara ,
× RELATED காசி நகரம் பைரவ வழிபாடும்