×

சுசீந்திரம் அருகே 15 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது

சுசீந்திரம், நவ.1: தொடர் மழையால் தேரூர் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகமானது. இதனால் ஷட்டர் திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் பழையாற்றிற்கு வந்தது. பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிய நிலையில் வெள்ளம் அருகில் உள்ள  கிராமங்களுக்குள் புகுந்தது. இதில் தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  சங்கர்நகர், மீனாட்சிநகர், உதிரப்பட்டி, பாலகிருஷ்ணன்புதூர், இந்திரா  காலனி, சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குத்துக்கல், ஆசாத் நகர், நங்கை  நகர், கற்காடு, பரப்புவிளை, கவிமணி நகர், தாணுமாலயன் நகர் உள்ளிட்ட  தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. தெருக்களில் தண்ணீர் புகுந்த  வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு  ஆளாகினர். ஏற்கனவே ஓகி புயல் வேளையில் இந்த பகுதிகள் வெள்ளத்தால்  சூழப்பட்டன. கடும் பாதிப்பை மக்கள் சந்தித்தனர். பழையாற்றில் தண்ணீர்  வேகமாக செல்லாததால் தற்போது ஜேசிபி இயந்திரம் வைத்து பழையாற்றின் கரைகளை  தூர்வாரினர், ஆனால் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை. சுசீந்திரம்  செங்கட்டிப்பாலம் வரை பணிகள் நடைபெற்றது.

இதர பகுதிகளில் ஆங்காங்கே  வாழை, தென்னை போன்றவை நடவு செய்யப்பட்டு ஆக்ரமிப்புகள் காணப்படுகிறது.  இதனை அகற்றி ஆற்றை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே கிராமங்களில் தண்ணீர்  புகுவது தடுக்கப்படும் என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த   பகுதியில் நான்கு வழி சாலை பகுதிகள் பணிகள் நிறைவு பெறவில்லை. இதனால்  தண்ணீர் வழிந்தோடாமல் ஆங்காங்கே தடைபட்டுள்ளது. இதனால் கிராமங்களில்  தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் நேற்றிரவு பூதப்பாண்டி அருகே  பேச்சான்குளம், பாலமோர் சாலையில் பாய்ந்த வெள்ளம் சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது.இரவிலும் தொடர் மழையால், ஆண்டித்தோப்பு முதல் ஈசாந்திமங்கலம் வரை தொந்திக்கரை சாலையிலும், ஈசாந்திமங்கலம் முதல் இறச்சக்குளம் வரை பாலமோர் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, சாலையின் மறுபுறம் உள்ள வயல்களில் பாய்ந்து வருகிறது.

இதனால் வயல்வெளிகள் தண்ணீரில் மிதக்கின்றன.  ஏற்கனவே மோசமாக காணப்பட்ட  பாலமோர் சாலையில் ,  ஈசாந்திமங்கலம், இறச்சகுளம் சுடலைமாட சுவாமி கோயில் ஆகிய 3 இடங்களில் தண்ணீர் சாலையில் குறுக்கே ஓடியதால்  அரிப்புகள் ஏற்பட்டன. நேற்று மதியத்திற்கு மேல்  நாவல்காடு மற்றும் இறச்சகுளம் சுடலைமாட சுவாமி கோயில் அருகே வெள்ளம்  குறைந்தது. இதனையடுத்து அந்த பகுதியில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சாலையோரம்  மணல் மூட்டைகள் அடுக்கி சரி செய்தனர். இதுபோல் பேச்சாங்குளம் பகுதியில், அரசியர்கால்வாயில் குப்பைகள் மற்றும் புதர் மண்டி இருந்ததுடன், புத்தன் அணை திட்டத்திற்காக போடப்பட்ட ராட்சத குழாய்கள் காரணமாக சாலையில் எதிரும்புதிருமாக தண்ணீர் ஓடிக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொக்லைன் மூலம் அரசியார் கால்வாயை நேற்று மதியம் முதல் தோண்டி தூர்வாரி வருகின்றனர். பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரபிரிவு அதிகாரிகள் அலட்சியம் காரணமாக இந்த அவல நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Flooding ,villages ,Suchindram ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை