×

‘மகா’ புயல் காரணமாக விடிய விடிய கொட்டித்தீர்த்தது குமரி முழுவதும் கனமழையால் 30 வீடுகள் இடிந்து விழுந்தன ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

நாகர்கோவில், நவ.1: மகா புயல் காரணமாக விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் குமரி மாவட்டம் வெள்ளக்காடாக மாறியது. 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. பல பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அரபிக்கடலில் வீசி வருகின்ற ‘மகா’ புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. விடிய விடிய மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் சிற்றார்-1, குழித்துறை, மயிலாடி, நாகர்கோவில், பெருஞ்சாணி, புத்தன் அணை ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ க்கு மேல் மழை கொட்டித்தீர்த்தது. மலையோர பகுதிகளில் பெய்து வருகின்ற கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரியாக திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பாய்வதால் பரளியாறு, குழித்துறை ஆற்றின் கரையோர கிராமங்களான மூவாற்று முகம், குழித்துறை, மங்காடு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 37.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2634 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 70.20 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2534 கன அடியாக இருந்தது. வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. சிற்றார்-1ல் 16.10 அடியாக நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு 835 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 805 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 16.20 அடியாகும். அணைக்கு 40 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பொய்கையில் 28.20 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. 137 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். அணைக்கு 135 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 345 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 25 அடியாகும். அணைக்கு 10 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் வினாடிக்கு 7.42 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மண் சுவர்களினால் ஆன வீடுகள் தொடர்ந்து இடிந்து வருகிறது. ஒரே நாளில் மேலும் 30 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் தாலுகாவாரியாக அகஸ்தீஸ்வரம் 7, தோவாளை 3, கல்குளம் 4, திருவட்டார் 3, விளவங்கோடு 5, கிள்ளியூர் 8 வீடுகள் இடிந்து விழுந்தன. நாகர்கோவில், திலகர் தெருவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி கார்த்திகேயன்(35) காயமடைந்தார். அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குளச்சல் அருகே செம்பொன்விளையில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி மரிய மதனலேனாள்(80) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு இடங்களில் மின்கம்பங்களும் உடைந்து விழுந்துள்ளன. நாகர்கோவில், பீச் ரோடு பள்ளம் செல்லும் சாலையில் மின்கம்பம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் உடைந்து தண்ணீர் தேங்கியுள்ளன. பள்ளி வளாகங்கள் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. தொடர் மழையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பகல் வேளையில் மழை குறைந்ததுடன் மாலையில் வெயிலடிக்க தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் பெய்து வருகின்ற தொடர் மழை காரணமாக மாதம்தோறும் நடைபெறுகின்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது ஒத்தி வைக்கப்பட்டது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நேற்று அறிவித்துள்ளார். இதனை போன்று இந்த மாதம் நடைபெற வேண்டிய மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டமும் மீனவர்கள் விசைப்படகுகள் மாயம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Houses ,Great Storm ,rivers ,Kumari ,flooding ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...