×

வேலை வாய்ப்பு பெருக குமரியில் ஐடி கம்பெனிகள் வரவேண்டும்

மார்த்தாண்டம், நவ.1 : குமரிமாவட்டத்தில் வேலை வாய்ப்பு பெருக ஐடி கம்பெனிகள் வரவேண்டும் என்று மார்த்தாண்டத்தில் நடந்த 4ஜி சேவை தொடக்க விழாவில் விஜயகுமார் எம்.பி பேசினார். குமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகா பகுதியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான தொடக்க விழா மார்த்தாண்டத்தில் நேற்று நடந்தது. விழாவில் தமிழ்நாடு தலைமை பொதுமேலாளர் ராஜூ தலைமை வகித்தார். முதன்மை பொதுமேலாளர்கள் ஜெகதீசன், நாகர்கோவில் பொதுமோலாளர் சஜிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 4ஜி சேவையை எம்.பிகள் வசந்தகுமார், விஜயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் விஜயகுமார் எம்.பி பேசியதாவது: நான் எம்.பியாக பதவியேற்றதும் பிஎஸ்என்எல் குமரிமாவட்ட ஆலோசகராக மத்திய அரசு என்னை நியமித்தது. அப்போது பிஎஸ்என்எல் ஆலோசனை கூட்டத்தில் 4ஜி சேவையை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரவேண்டும் என தெரிவித்தேன். அப்போது இதற்கான வாய்ப்புகள் இல்லை என தலைமை பொது மேலாளர் கூறினார். இருந்தாலும் 4ஜி சேவையை குமரிமாவட்டத்திற்கு கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினேன். இப்போது 4ஜி சேவை நமக்கு கிடைத்துள்ளது.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கு கூட பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்காமல் உள்ளது. இந்த வசதி குமரிமாவட்ட மக்களுக்கு கிடைத்துள்ளது. குமரிமாவட்டத்தில் எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் பட்டதாரிகள் ஏராளமானவர்கள் உள்ளனர். குமரி மாவட்டத்தில் 4ஜி வந்ததனால் ஐடி கம்பெனிகள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். மேலும் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. வசந்தகுமாரும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஐடி கம்பெனி, விமான நிலையம் குமரிமாவட்டத்தில் அமைந்தால் மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். கடந்த ஆண்டு 150 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்கப்பட்டது. அதுபோல் இந்த ஆண்டும் கொண்டு வரப்படும். 2025ம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வளச்சியடைய வேண்டும் அதற்காக மாவட்ட கலெக்டரிடம் ேராபோட்டிக் கிளாஸ் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து மாணவர்கள், ஐடிதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் மார்த்தாண்டத்தில் தான் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளனர்.

மேலும் பிஎஸ்என்எல்லில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக நமது மாவட்டம் உள்ளது. நான் பதவியேற்ற போது 7லட்சத்து 60 ஆயிரமாக இருந்த இணைப்பு தற்போது 8 லட்சத்து 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 4ஜி ேசவை மூலம் அதிகமாக வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். இதனால் குமரிமாவட்டம் பிஎஸ்என்எல் இணைப்பு வைத்திருப்பதில் நம்பர் ஒன் மாவட்டமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் ராஜன், செய்தி தொடர்பாளர் அலெக்சாண்டர், அரசு வக்கீல் சந்தோஷ்குமார்,  வக்கீல் மகேஷ் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

குமரியில் பிஎஸ்என்எல் நம்பர் ஒன்

தலைமை பொதுமேலாளர் ராஜூ பேசும்போது, இந்தியாவில் தொலை தொடர்பு வளர்ச்சியை பொறுத்தவரையில் தமிழ்நாடு முக்கிய மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் பிஎஸ்என்எல்லில் அதிக தகவல் பரிமாற்றம் செய்தும் பகுதியாக குழித்துறை உள்ளது.  பிஎஸ்என்எல் குமரிமாவட்டத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் இன்னும் அதிக வாடிக்கையார்கள் சேர்வார்கள். நிதி பற்றாக்குறையை சமாளிக்க தொலை தொடர்பு துறைக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நம்பர் ஒன் நிறுவனமான மாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags : IT Companies ,Kumari ,
× RELATED கர்நாடகாவில் உள்ள ஐ.டி நிறுவனங்கள்,...