×

மாநகராட்சியில் குப்பைகளுக்கு வரி வசூலிக்க திட்டம்

கோவை,  நவ. 1: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு வரி வசூலிக்கும் திட்டம் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு தினமும் 800 முதல் 900 டன் குப்பைகள் வருகின்றன. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைகிடங்கில் தீ விபத்து ஏற்படுகிறது என கூறப்படுகிறது. இதை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்க மாநகராட்சி  நிர்வாகம் சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற சிறு மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக குப்பைகளை வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கி  மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்களுக்கு அனுப்பப்படும். இதனால் இனி வரும் காலங்களில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் சேர்வது தடுக்கப்படும்.

இதனிடையே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளுக்கு வரி வசூலிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.  இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், ‘‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு ‘யூசர் பிரண்லி’ வரி வசூலிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மாதம் ரூ.10 முதல் ரூ.30 வரை குப்பைகளுக்கு ஏற்றவாறு வசூல் செய்ய பரிசீலனை செய்யப்படும். இதற்காக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதன் பின்பே முறைப்படி இது நடைமுறைப்படுத்தப்படும்,’’ என்றார்.


Tags : corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு