×

இரவில் முகமூடி அணிந்து பைக் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் சிக்கினர்: பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் எல்.ஐ.சி.காலனியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சையது இஸ்மாயில் (30). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20ம்  தேதி இரவு, இவர் தனது பைக்கை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, இவரது பைக் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அங்கு  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரண்டு கொள்ளையர்கள் முகமூடி அணிந்தவாறு இஸ்மாயில் பைக்கை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து அவர் சங்கர் நகர் போலீசில் புகார் தெரிவித்தார்.  அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பம்மல் பிரதான சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்ற இருவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த  போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து முறைப்படி விசாரணை நடத்தினர். அதில், இருவரும் பம்மல் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (45) மற்றும் அவரது 15 வயது மகன் என்பதும், இவர்கள் இருவரும்தான்  முகமூடி அணிந்த நிலையில் இஸ்மாயில் பைக்கை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் பம்மல் பகுதியில் இரவில் முகமூடி அணிந்தபடி சென்று, வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் பைக்குகளை திருடி, விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து திருடிய பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அருள்ராஜை புழல் சிறையிலும், அவரது 15 வயது மகனை  செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...