×

கம்பெனி ஊழியர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

பூந்தமல்லி: கம்பெனி ஊழியர் கொலை  வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ஏசுகுமார் (28). இவர் திருவேற்காடு கோலடி பகுதியில் உள்ள  தனியார் அலுமினியம் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அங்கு,  சீர்காழியை சேர்ந்த சிலம்பரசன் (25), ரகு ஆனந்தன் (24) ஆகியோர் உடன் வேலை செய்து வந்தனர். இவர்கள் ஏசுகுமார் குறித்து அங்கிருந்தவர்களிடம் தவறாக  பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஏசுகுமார் இதுகுறித்து கேட்டபோது மூன்று பேருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் கடந்த 30.12.2013 அன்று இரவு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக  ஏசுகுமார் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலம்பரசனும், ரகுஆனந்தும் சேர்ந்து அருகிலிருந்த கட்டையை எடுத்து ஏசுகுமாரை அடிக்க விரட்டிச் சென்றனர்.

இதனால், ஏசுகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியதில் ஏசுகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிந்து, 2 பேரையும் கைது செய்து சிறையில்  அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார். ஆனால் குற்றவாளிகள்  இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்கள். இதையடுத்து இருவரையும் கைது செய்ய, நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

இதையடுத்து சீர்காழியில் பதுங்கியிருந்த சிலம்பரசன், ரகுஆனந்தன் ஆகிய இரண்டு பேரையும் திருவேற்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிலம்பரசன், ரகுஆனந்தன்  ஆகியோர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். இந்த  வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அந்தமான் முருகன் ஆஜராகினார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...