×

மேற்கு தாம்பரம் பகுதியில் சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் நெரிசல்: வாகன ஓட்டிகள் தவிப்பு

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இங்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு காரணமாக இங்குள்ள தெருக்களில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல்  அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவிந்தராஜன் தெரு, அய்யாசாமி தெரு, அழகேசன் தெரு, துரைசாமி தெரு, எம்.கே.ரெட்டி தெரு, முத்துரங்க முதலியார் தெரு, சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து  நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.  இதில் கோவிந்தராஜன் தெருவில் வணிக வளாகம் உள்ளது. அதேபோல், மற்ற தெருக்களிலும் வணிக வளாகங்கள், கடைகள், ஹோட்டல்கள் என ஏராளமாக உள்ளன. ஆனால், இவற்றில் பார்க்கிங் வசதி  இல்லாததால், அங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.

 இந்நிலையில், கோவிந்தராஜன் தெருவில் நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலகம் கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கார்களில் வருகின்றனர். இவ்வாறு  வருபவர்கள் அவர்களது கார்களை தெரு முழுவதும் ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் தெரு முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  ‘‘மேற்கு தாம்பரம், கோவிந்தராஜன் தெருவில் வணிக வளாகம், ஓட்டல், துணிக்கடை, தனியார் அலுவலகங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தினமும் இந்த தெரு வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடந்தும், வாகனங்களில்  சென்றும் வருகின்றனர்.

இவ்வாறு எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும் இந்த தெருவில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள்,  கான்ட்ராக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது வாகனங்களை தெருவில் ஆங்காங்கே வரிசையாக நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் தெருக்களில் உள்ள வணிக வளாகம், தனியார் அலுவலகம்  உள்ளிட்டவைகளுக்கு வரும் கார்களும் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த தெரு வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதனால் இந்த தெருவை கடந்து செல்லவே குறைந்தது அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : area ,West Tambaram ,Motorists ,
× RELATED சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிக்கு புயல் எச்சரிக்கை