×

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாண்டிசோரி கல்வி முறை:2 ஆண்டில் அமல்,..ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த 2 ஆண்டுகளில் மாண்டிசோரி கல்வி முறை செயல்படுத்தப்படும், என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி  கல்வித்துறையின் கீழ் 281 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் 200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் செயல்படுகிறது. இந்த மழலையர் வகுப்புகளில்  மாண்டிசோரி கல்வி முறையினை புகுத்துவதில் சென்னை மாநகராட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, சில சென்னைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி டிரஸ்ட் மூலம்  மாண்டிசோரி பயிற்சி 2008 முதல் 2010 வரை அளிக்கப்பட்டது.

மழலையர் வகுப்பில் மாண்டிசோரி கல்வியின் தாக்கத்தை உணர்ந்த மாநகராட்சி நிர்வாகம் இந்த கல்வியாண்டில் ஏற்கனவே பயிற்சி பெற்ற 38 பள்ளிகளில் பணிபுரியும் 73 ஆசிரியர்களுக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதல் அக்டோபர் 22ம் தேதி வரை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி அனைத்து மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கும் படிப்படியாக வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொள்வதில் தொடங்கி மாண்டிசோரி முறைகள், ஆசிரியர்களின் கடமைகள், வகுப்பறை நிர்வாகம், மாண்டிசோரி உபகரணங்களைக் கையாளுதல், அன்றாட வாழ்வியல், கணினி செயல்பாடுகள்  மற்றும் மொழி ஆளுமை திறனை வளர்ப்பதாகவும் உள்ளது. இத்தகைய பயிற்சியினால் மழலையர் வகுப்புகளில் தரமான கல்வியை கிடைக்க செய்வதுடன் சென்னைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிச்சயமாக அதிகரிக்கச் செய்ய முடியும்,  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்படுத்தப்படும் மாண்டிசோரி கல்வி பயிற்சி முறையினை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி : சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 281 பள்ளிகளில் செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் உள்ளன.  தற்போது 90 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முதல்வர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு அறிவுரைகள்  வழங்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் கற்றல் திறனுக்கு ஏற்ற வகையில் கல்வி கற்பிக்கும் மாண்டிசோரி கல்வி முறையை தற்போது 22 சென்னை பள்ளிகளில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளிலும் இந்த கல்வி  முறையை நடைமுறைபடுத்தப்படும். மாநகராட்சி பள்ளிகளின் உட்டகட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.160 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக டிஜிட்டல் முறையில் மற்றும் சமூக  வலைதளம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தபடும், என்றார்.

Tags : schools ,Corporation of Madras ,Amal ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...