×

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க குடியிருப்பு பகுதியில் விதிமீறி இயக்கப்படும் கனரக லாரிகள்: விபத்துகள் அதிகரிப்பு,..பொதுமக்கள் அச்சம்

திருவெற்றியூர்: மாத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் இருக்க கனரக லாரிகள் குடியிருப்பு பகுதிகளில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். மணலி, மாத்தூர் அருகே மாதவரம் 200 அடி சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக செல்லும் கனரக வாகனம் மற்றும் கார் போன்றவைகளுக்கு இங்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சுங்க சாவடியை கடந்து சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக ட்ரெய்லர் மற்றும் டேங்கர் லாரிகள் மாத்தூர் அருகே மாதவரம் 200 அடி சாலை வழியாக செல்லாமல் குடியிருப்புகள் நிறைந்த ஆண்டார்குப்பம்  செங்குன்றம் சாலை, கொஞ்சப்பூர் சாலை மற்றும் காமராஜர் சாலை போன்ற பகுதிகள் வழியாக செல்கின்றன.

இவ்வாறு கனரக வாகனங்கள் இந்த சாலைகளில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகர பேருந்து மற்றும் குடிநீர் லாரி, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி குடியிருப்புகள் நிறைந்த  பகுதிகளில் இந்த கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் ஆண்டார்குப்பம், கொசப்பூர் மற்றும் மணலி காமராஜ் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து  காவல் துறைக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’மாத்தூர் சுங்கச்சாவடி  வழியாக கனரக வாகனங்கள் செல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் வேகமாக செல்கின்றன. இதனால் சாலையில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் லாரிகள் நிறுத்த மையத்தில்  நிறுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக சாலையோரங்களில் லாரிகளை நாள்கணக்கில் நிறுத்தி வைத்து விடுகின்றனர்.

குறிப்பாக மாத்தூர் சுங்கச்சாவடி அருகே இரண்டு புறமும் 500 மீட்டர் தூரத்திற்கு எந்த வாகனங்களும் சாலை ஓரம் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி ஒரு சிலர் தங்கள்  லாரிகளை சுங்கச்சாவடி அருகே நாள்கணக்கில் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள் சாலையோரங்களில் லாரிகள் நிற்பது தெரியாமல் பின்பக்கமாக அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.  எனவே குடியிருப்பு பகுதிகளில் லாரிகள் வருவதை தடுக்கவும், சாலையோரங்களில் நிறுத்தப்படும் லாரிகள் அப்புறப்படுத்த போக்குவரத்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினர்.    
                                             
செயல்படாத சிக்னல் கொசப்பூர், மாதவரம் 200 அடி சந்திப்பில் வாகனங்கள் திரும்பும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது என்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு இங்கு போக்குவரத்தை பராமரிக்க சிக்னல் பொருத்தப்பட்டது. ஆனால்  கடந்த சில நாட்களாக இந்த சிக்னல் பழுதாகி செயல்படாமல் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் போக்குவரத்து போலீஸாருக்கும் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

Tags : areas ,Accidents ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்