×

ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு காரணமாக மாநகராட்சி நிலத்தை மீட்காமல் திரும்பி சென்ற அதிகாரிகள்: கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி நிலத்தை மீட்க வந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு காரணமாக திரும்பிச் சென்றனர். கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில்,  சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 2 லட்சம் சதுர அடி நிலம் உள்ளது. இந்த இடத்தை, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், சுண்ணாம்பு தயாரிக்க, 26 கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் குத்தகைக்கு விடப்பட்டது.  ஆனால், கடைக்காரர்கள் வரி  மற்றும் வாடகை ஆகியவற்றை செலுத்தாமல்  இந்த இடத்தை தங்களுக்கு சொந்தமானது என அறிவிக்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் மேற்கண்ட இடத்தை செந்தமாக்கிக்கொள்ள  தற்போது விற்கும் விலையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும், என்று உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த வழக்கை  வாபஸ் பெற்றுக்கொண்டனர். ஆனாலும் அவர்கள் மாநகராட்சியில் உரிய பணத்தை செலுத்தவும் இல்லை. இடத்தை காலி  செய்யவும் இல்லை.  

அதுமட்டுமின்றி மேற்கண்ட இடத்தை சிறு தொழிற்சாலை, வாகனங்கள் பழுதுபார்ப்பதற்காக உள் வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த இடத்துக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வாடகை ₹12 கோடி பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன், இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்யும்படி அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இதுவரை அவர்கள் இடத்தை காலி செய்யவில்லை.
இதனிடையே நேற்று காலை  சென்னை மாநகராட்சி  4வது மண்டல  பொறுப்பு அதிகாரி காமராஜ்,  செயற்பொறியாளர் புவனேஸ்வர், உதவி பொறியாளர்கள்  தனசேகர், ரங்கசாமி மறறும் மாநகராட் ஊழியர்கள், ஆக்கிரமிப்புகை அகற்ற   பொக்லைன் இயந்திரத்துடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, 3 நாள் காலஅவகாசம் கொடுங்கள். அதன்பிறகு வீடுகளை காலி செய்து சென்று விடுகிறோம் என கூறினர். இதனால் அதிகாரிகள்  வீடுகளை இடிக்காமல் திரும்பி சென்றனர்.  அசம்பாதவிதம் நடக்காமலிருக்க  வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் முத்துகுமார், இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த  சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : occupiers ,corporation land ,protests ,
× RELATED 3 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்