×

ஊதியம் உயர்த்தக்கோரி நவ.6ல் துப்புரவு பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

ஈரோடு, நவ.1: குறைக்கப்பட்ட ஊதியத்தை உயர்த்த கோரி தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நவ.6ம் தேதி  முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் நேற்று நடந்தது. சங்க  மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கி கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களின் ஊதியம் தற்போது எவ்வித காரணமும் இல்லாமல் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் 7வது ஊதியக்குழு உயர்வில் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஊராட்சிகளில் நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றி வரும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக பெற்று வந்த குறைந்த ஊதியத்தை மேலும் குறைத்துள்ளனர். குறைக்கப்பட்ட ஊதியத்தை உயர்த்துவதோடு அரசாணைகளின்படி ஊதியம் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 6ம் தேதி காலை 11 மணி முதல் தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


Tags : Cleaner employees ,
× RELATED தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவு...