×

மாகறல் - வாலாஜாபாத் இடையே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

காஞ்சிபுரம், நவ. 1:  காஞ்சிபுரம் மாவட்டம், மாகறல் - வாலாஜாபாத் சாலையில்  இளையனார்வேலூர் அடுத்த குண்டுமேடு பகுதியில் கால்வாய் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் சுமார் 10 கிராம மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மாகறல் பகுதியில் இருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் குண்டுமேடு பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள மதகு கால்வாயில் தரைப்பாலம் இருந்தது. கடந்த 2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது, தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஆனாலும், இப்பகுதி பொதுமக்கள் நிரந்தரத் தீர்வாக மதகு கால்வாயில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். எனவே, மத்தியக்குழு ஆய்வு செய்து  ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் மதகு கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.  இதனால் மாகரல் கிராமத்தில் இருந்து அவளூர், அங்கம்பாக்கம், கன்னடியன்குடிசை,  கம்பராஜபுரம், தம்மனூர், இளையனார்வேலூர், நெல்வேலி, ஆசூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.  எனவே, மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Makkal ,Walajabad ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...