×

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகைக்குப்பின் மாமல்லபுரத்தில் இயங்கி வந்த சிற்றுந்துகள் நிறுத்தம்

மாமல்லபுரம்,  நவ.1:  பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த மாதம்   மாமல்லபுரம் வந்து சென்றதைத் தொடர்ந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப்  பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.   இந்நிலையில் வெளிநாட்டு  மற்றும்  உள்நாட்டு சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக அதிகளவில்  மாமல்லபுரத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் மாமல்லபுரத்திலுள்ள புராதான  சின்னங்களான வெண்ணய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம்,  கடற்கரை  கோயில் உள்ளிட்டவைகளை கண்டு ரசிக்கின்றனர்.   இந்நிலையில் இரு தலைவர்கள்  வருகையை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், சுற்றுலாப்  பயணிகள் கொண்டு வரும் தனியார் பஸ் , வேன், கார்களால்  மாமல்லபுரம்  நகரத்தினுள் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதனைத் தவிர்க்க  சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலிலேயே  (கிழக்கு கடற்கரை சாலையிலேயே) நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரசு  சார்பில்  இயக்கப்படுகின்ற சிற்றுந்துகளில் (மினி பஸ்) சுற்றுலாப் பயணிகள்  மாமல்லபுரம் நகரப் பகுதியில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த  சிற்றுந்தில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.10 ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயம்   செய்யப்பட்டது.

 கடந்த ஒரு வாரமாக இந்த சிற்றுந்து எந்த ஒரு  முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்திற்கு வரும்  சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை இசிஆர் சாலையிலேயே நிறுத்திவிட்டு  மாமல்லபுரம் நகரத்திற்கு நடந்தே  வருகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள்  கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள்  கூறுகையில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த மாதம்  மாமல்லபுரத்திற்கு வந்து சென்றதையடுத்து  சுற்றுலாப் பயணிகளான நாங்கள்  குடும்பம் குடும்பமாக வந்து புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறோம்.  மேலும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது.  இந்நிலையில் வாகனங்கள் அனைத்தும் மாமல்லபுரம் நுழைவு  வாயிலிலேயே நிறுத்தப்படுகிறது.  இசிஆர் சாலை மாமல்லபுரம் நுழைவு  வாயிலிலிருந்து மாமல்லபுரம் பேருந்து நிலையம் வரை சுற்றுலாப் பயணிகள்  சென்று வருவதற்கு ஒரு   நபருக்கு ரூ.10 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 5  சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

 ஆனால் அந்த சிற்றுந்துகள் திடீரென  நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம்.  இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது ஒரு  நாளைக்கு  ரூ. 3 ஆயிரம் வரை  குறைந்தளவு வருமானம் கிடைப்பதால் அந்த  சிற்றுந்துகளை நிறுத்திவிட்டதாக தெரிவித்தனர். எனவே நிறுத்தப்பட்ட  சிற்றுந்துகளை உடனே இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென சுற்றுலாப் பயணிகள்  வலியுறுத்துகின்றனர்.

Tags : Modi ,stop ,President visits ,Mamallapuram ,Chinese ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...