கருங்குழி பேரூராட்சியில் 9 குளங்கள் நிரம்பின

மதுராந்தகம், நவ. 1: மதுராந்தகம் அடுத்துள்ளது கருங்குழி பேரூராட்சி. இங்கு கிராம மக்கள் பயன்பாடு மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக அக்காலத்தில் அமைக்கப்பட்ட 27 குளங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான குளங்களுக்கான   நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து போய் மழைகாலங்களில் குளத்திற்கு தேவையான தண்ணீர் சென்று சேர்வதில்லை. இதனால் இந்த குளங்களில் மழைக்காலங்களில் கூட போதிய நீர் நிரம்பாத சூழ் நிலை இருந்து வந்தது. இந்நிலையில், கருங்குழி  பேரூராட்சி மூலமாக ஒன்பது குளங்களுக்கு நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.  இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக இப்பகுதியில் பெய்து வந்த மழைநீர் இந்த கால்வாய்கள் மூலமாக  குளங்களுக்கு விரைவாக நீர் வந்து சேர்ந்தது. இதன் காரணமாக பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டில் உள்ள சுண்ணாம்புகுளம், 12வது வார்டில் உள்ள செம்மன்குளம், தேசிய நெடுஞ்சாலை ராகவேந்திரர் கோவில் அருகே அமைந்துள்ள  மாரியம்மன் கோவில் குளம், மற்றும் ரெட்டி குளம், தட்டான் குளம் உள்ளிட்ட 9 குளங்களில் தற்போது சுமார் 80 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதன் காரணமாக குளங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் உயரும் என்பதை அறிந்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தெரிவிக்கையில், இதே  போன்று இன்னும் சில குளங்கள் நீர் வரத்து கால்வாய்கள் சரி இல்லாமல் இருக்கின்றன. அவற்றையும் சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்போது இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட 21 குளங்களும் நீர் நிரம்பி பொது மக்களுக்கு  பயனுள்ளதாக அமையும்’’ என தெரிவித்தார்.

நேற்று (அக்.31) காலை 7 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையளவு (மி.மீட்டரில்) விவரம்:
காஞ்சிபுரம்    28.20
திருப்பெரும்புதூர்    48.60
உத்திரமேரூர்    55.00
வாலாஜாபாத்    18.00
திருப்போரூர்    16.00
செங்கல்பட்டு    17.40
திருக்கழுக்குன்றம்    25.40
மாமல்லபுரம்    32.20
மதுராந்தகம்    31.00
செய்யூர்    11.00
தாம்பரம்    49.10
கேளம்பாக்கம்    22.20

Tags :
× RELATED திருப்புத்தூரில் பராமரிப்பின்றி...