×

கேளம்பாக்கம், கட்சிப்பட்டில் வெள்ளத்தில் மிதக்கும் அரசு பள்ளிகள்

திருப்போரூர், நவ.1:  சென்னை அருகே உள்ள புறநகர்ப் பகுதியான கேளம்பாக்கத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளது. இரண்டு பள்ளிகளுக்கும்  இடையே மதிற்சுவர் உள்ளது. இந்த இரண்டு பள்ளிகளிலும் சுமார் 1500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக மகளிர் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியது.  தண்ணீர்  வெளியேறும் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் மழை நீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 29ம் தேதி சாத்தங்குப்பம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பள்ளி வளாகத்திற்கு வெளியே  இருந்த கால்வாய் தூர் வாரப்பட்டது. ஆனாலும், பள்ளி வளாகத்தில் இருந்த மழை நீர் வெளியேறாததால் நேற்று முன்தினம் கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் ஊராட்சி செயலாளர் குமாரசாமி மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம்  மூலம் கால்வாய் தோண்டி பள்ளி வளாகத்தில் தேங்கி இருந்த மழை நீரை வெளியேற்றினர்.

இதைத் தொடர்ந்து மழை நீர் முழுவதுமாக வெளியேறியது. இருப்பினும்  கேளம்பாக்கம் பகுதியில் மழை நீர் வடிகால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமாக மழைநீர் வெளியேறும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.  பெரும்புதூர்: பெரும்புதூர் பேரூராட்சி கட்சிபட்டு பகுதியில் அரசினர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கட்சிபட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 250க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  தற்போது கடந்த சில தினங்களாக ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்து வருகிறது. மழைநீர் செல்ல போதிய வசதி இல்லை. இதனால் பள்ளி வளாகத்தில் மழைநீர்  குட்டைபோல் தாங்கி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

இதனை பெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனிக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ., பழனி சம்பவ இடத்திற்கு வந்து பள்ளியை பார்வையிட்டார். பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல்  கொடுக்கபட்டது. பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் தற்காலிகமாக மழைநீர் வெளியேற்றபட்டு, பைப் புதைக்கபட்டது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கிவிடுகிறது. எனவே  பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காம இருக்க நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; கட்சிபட்டு நடுநிலைப்பள்ளிக்கு கடந்த சில ஆண்டு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் சாலை அகலபடுத்தி சீரமைக்கபட்டது. இதனால் சாலையில் இருந்து பள்ளி  தாழ்வானதாக உள்ளது. இதனால் மழை நீர் செல்ல போதிய கால்வாய் வசதி இல்லை. மேலும் மழைக்காலத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் குட்டை போல் தேங்கி விடுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் பள்ளி வகுப்பறையில் உள்ளே மழைநீர்  புகுந்து விடுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மழைக்காலத்தில் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் சாலையில் மழைநீர் கல்வாய் அமைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மண் கொட்டி நிரப்ப  வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Government schools ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...