×

நெய்வேலி கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்


ஊத்துக்கோட்டை, நவ. 1:  நெய்வேலி கிராமத்தில் சாலைகளை சீரமைக்க கோரி நாற்று நட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள நெய்வேலி ஊராட்சியில் உள்ள மேட்டுத்தெரு  ஒன்றிய சாலை, அம்பேத்கர் நகரில் உள்ள தார்சாலை, பிராமண தெரு தார்ச்சாலை, வன்னியர் தெரு சிமென்ட் சாலை, தலையாரி தெரு தார்ச்சாலை ஆகிய சாலைகளை அமைத்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது சாலைகள்  குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலைகளை சீர் செய்ய கோரி கடந்த 2015ம் ஆண்டு முதல் இன்று வரை பெரியபாளையம் வட்டார வளர்ச்சி  அலுவலர் முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவு வரை பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத பிடிஒ உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்தும், உடனே சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் நாற்று நடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கிளைச் செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி.கண்ணன், ரவி, வக்கில் கன்னியப்பன், பாலாஜி, கங்காதரன், அருள் மற்றும் கிராம  பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  முன்னதாக போராட்டக்காரர்களிடம் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ‘‘சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று கூறினர். இதை கேட்ட கிராம மக்கள், ‘‘எப்போது சாலை  போடுவீர்கள்? என்பதை எழுதிக்கொடுங்கள்’’ என்றனர். ஆனால் அதிகாரிகளோ எழுதிக் கொடுக்க மறுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதனால் போராட்டக்காரர்கள் நாற்று நடும் போராட்டத்தை நடத்தி முடித்தனர். மேலும் சாலை அமைப்பது குறித்து அதிகாரிகள் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்காததால் அடுத்தகட்ட போராட்டமாக பெரியபாளையம் பிடிஒ  அலுவலகத்தை முற்றுகையிடுவது என கூறிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நெய்வேலி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Seedling women ,road ,village ,Neyveli ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம் சாலையை கடக்க முயன்ற பெண் பைக் மோதி பலி