×

நரசிங்கபுரம், நத்தம் ஊராட்சி பகுதிகளில் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு

திருவள்ளூர், நவ. 1: திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட்சி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் திறந்த நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இவற்றை உடனே  மூடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் விவசாய நிலத்தில் திறந்து கிடந்த ஆழ்துளை குழாய் குழிக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜீத் 80 மணி நேர மீட்பு போராட்டத்திற்கு பின் உடல்  சிதைந்த நிலையில் கிடைத்தார். நாட்டு மக்களையே இச்சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் காலனியில் அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையோரம் திறந்த நிலையில் ஒரு ஆழ்துளை கிணறு  உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்தும் இதுவரை மூடப்படவில்லை. சம்பந்தப்பட்ட விஏஓவும் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்  ஆய்வு செய்து திறந்த நிலையில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் உடனே மூடுவதற்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கடலோர பகுதிகளான நாசம்பாளையம், சுண்ணாம்புகுளம், ஒபசமுத்திரம், குழிநாவல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நத்தம் பகுதியில் உள்ள ஆழ்துளை  கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய் வழியாக வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த ஆழ்துளை கிணறுகள் பழுதடையும்போது ஊராட்சி நிர்வாகம் வேறு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கிறது. இவ்வாறாக அந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட 3க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளும் மூடப்படாமல் திறந்த நிலையில்  உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே இந்த ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்காலிகமாக மூடுவதாக புகார்
திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை குழாய் கிணறுகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதில் அரசு சார்பில் போடப்பட்டு பயனற்றுள்ள ஆழ்துளை கிணறுகளை பிளாஸ்டிக் பைப்பால் அதிகாரிகள் மூடி  வருகின்றனர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான ஆழ்துளை கிணறுகள் பயனற்று உள்ளன. இவற்றை, தற்போது பிளாஸ்டிக் மூடியால் அதிகாரிகள் அடைக்கின்றனர். திறந்தவெளியில் உள்ளதால் வெயில்,  மழையால் சில மாதங்களில் பிளாஸ்டிக் உடைந்துவிடும். மேலும் குப்பை பொறுக்கும் சிலர் இந்த பிளாஸ்டிக் மூடியை கழற்றி காயலான் கடைகளில் விற்கும் நிலையும் உள்ளது. இதனால் மீண்டும் பழைய நிலைக்கு சென்று ஆபத்தான நிலை  உருவாகும். எனவே பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றினால் பயனுள்ளதாக அமையும். தற்போது செய்து வரும் ஏற்பாடு கண்துடைப்புக்கே’’ என்றனர்.

Tags : area ,Narasingapuram ,Natham Panchayat ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...