×

ரவுடி கொலையில் 7 பேர் கைது

திருமுல்லைவாயல், நவ. 1: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பெரியார் நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (32). பிரபல ரவுடி. இவரது மனைவி ஞானசெல்வி. இவர்களுக்கு ஜெகநாதன் (7) என்ற மகன் உள்ளான். ஆவடியில்  உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் சந்தோஷ்குமார், தனது மகனை பள்ளி வேனில் ஏற்றி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது 7 பேர் கும்பல் அவரை வழிமறித்து ஓடஓட விரட்டி  வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. புகாரின்பேரில்  திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். விசாரணையில் சந்தோஷ்குமாரை  அதே பகுதியை சேர்ந்த பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய பாம்பு தினேஷ்  தலைமையில் வந்த கும்பல் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்து பாம்பு தினேஷ்குமார் (26) தலைமையில் வின்சென்ட் பால்ராஜ் (26), வெங்கடேஷ்குமார் (25), சரண்குமார் (26), ஜீவன்பிரபு (19), பிராங்கிளின் (22), கணேஷ் (20) ஆகிய 7 பேர் கும்பல் நேற்று மாலை  திருமுல்லைவாயல் போலீசில் சரணடைந்தனர். பின்னர், அவர்களை ஆவடி உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தீவிரமாக விசாரணை நடத்தினார். பின்னர் 7 பேரையும் திருமுல்லைவாயல் போலீசார் கைது செய்து அம்பத்தூர் நீதிபதி வீட்டில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில் கூறப்படுவதாவது: ரவுடி சந்தோஷ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (24) என்ற வாலிபருக்கும் சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது  கோபாலகிருஷ்ணனை கொலை செய்வதாக சந்தோஷ்குமார் மிரட்டி உள்ளார்.

இதனால் அவர் அதே பகுதியில் வசிக்கும் நண்பரான பாம்பு தினேஷிடம் கூறி உள்ளார். இதனையடுத்து தினேஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 29ம் தேதி இரவு சந்தோஷ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்  மனைவி, குழந்தையுடன் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.  அந்த கும்பல் கதவை தட்டி சந்தோஷ்குமாரை வெளியே அழைத்து உள்ளனர். சுதாரித்துக்கொண்ட அவர், கதவை திறக்காமல் இருந்து உள்ளார். பின்னர் அந்த கும்பல் கற்களால் அவரது   வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன் பிறகு சந்தோஷ்குமாரின் உறவினர்கள் எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகு இரவு ரோந்து போலீசார் வந்து விசாரித்து விட்டு சென்று விட்டனர்.  நேற்று முன்தினம் காலை  சந்தோஷ்குமார் மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது தினேஷ் தலைமையிலான கும்பல் வெட்டிக்கொலை செய்தனர்.  பின்னர் அனைவரும் வில்லிவாக்கத்தில் உள்ள  தினேஷ் உறவினர் வீட்டில் தஞ்சம்  அடைந்துள்ளனர். தகவல் தெரிந்து, தனிப்படை போலீசார் அங்கு சென்றபோது அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பினர். அவர்கள் அனைவரும் ஆந்திரா,  நகரிக்கு சென்று நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியுள்ளனர். இதன் பிறகு போலீசார்  தேடுவதை அறிந்து பாம்பு தினேஷ் தலைமையில் 7 பேர் கும்பல் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

Tags : murder ,Rowdy ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...