×

திருமக்கோட்டை அரசு பள்ளி கட்டிடத்தில் விரிசல்

மன்னார்குடி, நவ.1: ஆபத்தான நிலையில் உள்ள திருமக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் கட்டி பல வருடங்கள் ஆன நிலையில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கடந்த 8 வருடங்களுக்கு முன் சேதமடைந்தது. அப்போதே சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாய் கட்டித்தர கிராம மக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடந்த 2012ம் ஆண்டு ரூ.45 ஆயிரம் மதிப்பில் மராமத்து பணிகள் மட்டும் செய்யப்பட்டது.இருப்பினும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பள்ளி கட்டிடம் மீண்டும் சேதமடைந்தது. இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இக்கட்டிடம் மேலும் சேதமடைந்து விட்டது.

இப்பள்ளி கட்டி டத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் இடிந்து விழுந்தும், கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்தும், அதன் மேல் செடி கொடிகள் முளைத்தும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் வலுவிழந்த இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் மாணவ மாணவிகள் ஒருவித அச்சத்தோடு பள்ளிக்கு வந்து செல்கின்ற னர்.எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் திருமக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு நேரில் வந்து சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து சீரமைத்து பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக் களும், மாணவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirumakottai Government School ,building ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...