×

கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் உள்ள 10 டன் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய முடிவு

கும்மிடிப்பூண்டி, நவ. 1: தொழிற்சாலைகளில் கைப்பற்றிய குண்டுகளை செயலிழக்க வைப்பது தொடர்பாக ராணுவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு  அருகிலுள்ள ஒரு கிணற்றில் 2006ம் ஆண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஜான்சன் மற்றும் பாபு என்கிற முகிலேசன் ஆகிய 2 சிறுவர்கள் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது கிணற்றில் சிக்கிய  ஒரு மூட்டையை மேலே  கொண்டு வந்து பார்த்தபோது ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அதை இருவரும் விளையாட்டு பொருள் என்று நினைத்து கற்களை வைத்து உடைத்தபோது வெடித்து சிதறியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து  அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன் உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நவீன் சந்தர் நாகேஷ் தலைமையிலான போலீசார்  ஒட்டு மொத்த கிணற்று நீரையும் மின் மோட்டார்  மூலம் வெளியேற்றி பார்த்தபோது ஏ.கே 47 ரக மற்றும்  சிறிய ரக துப்பாக்கிகள் மூட்டை மூட்டையாய் சிக்கின.

மேலும் ஏ.கே 47 துப்பாக்கியின் தோட்டாக்கள் முதல் சிறிய ரக துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன.  இதையடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள 22 இரும்பு உருக்காலைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்தபோது கண்ணி  வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் என ஒவ்வொரு இரும்பு உருக்காலைகளிலும்  டன்  கணக்கில் சிக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு அவற்றின் தன்மையை  ஆராய்ந்தனர். அப்போது, அவை வெளிநாட்டில் இருந்து உருக்காலைக்கு பழைய இரும்புகள் என்ற போர்வையில் மூலப் பொருளாக இறக்குமதி செய்யப்பட்டவை என்பது தெரிந்தது. அதில் அமெரிக்க நாட்டு முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது.  மேலும் அவை எந்த நேரத்திலும் வெடிக்கும் தன்மையுடன் இருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து 10 டன் வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவற்றை கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் மூடப்பட்ட ஒரு கம்பெனியில்  பாதுகாப்பாக வைத்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ‘அலாய்ஸ்’ என்ற  இரும்பு உருக்கு ஆலையின்  மேலாளர் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக்குமார் ஜெயின் மற்றும் மேற்பார்வையாளர்களாக இருந்த மனோஜ் குமார்,  ராகேஷ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பொடா நீதிமன்றத்தில் கடந்த 8.6.2008ம் ஆண்டு மாற்றப்பட்டது. இதற்கிடையே 2012ம் ஆண்டு  அசோக்குமார் ஜெயின் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்குக்கு தடை ஆணை பெற்றார். இந்த தடை நீதிமன்றத்தால் கடந்த வாரம் விளக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இவ்வழக்கு பூந்தமல்லி  நீதிமன்றத்தில் மீண்டும்  விசாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் வகையில் புனேவில் இருந்து வந்திருந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் ராணுவ  சிறப்பு நிபுணர் வேணுகோபால் நாயுடு தலைமையிலான குழு மற்றும்  கும்மிடிப்பூண்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இவை எப்போது? எங்கு வைத்து செயலிழக்க வைப்பது என்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Tags : zone ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...