×

இரவுநேர பாராக மாறிவரும் திருவாரூர் ஜிஹெச் வளாகம்

திருவாரூர், நவ.1: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகமானது இரவு நேரங்களில் மது கூடமாக செயல்படுவதால் அதனை தடுக்க வேண்டும் என நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வெளி நோயாளிகளாக தினந்தோறும் 1200க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் நிலையில், உள்நோயாளிகளாக திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு எதிரே இருந்து வரும் வாகன நிறுத்துமிடம் உட்பட பல்வேறு இடங்களில் காலி மதுபாட்டில்கள் அதிக அளவில் கிடக்கிறது. இரவு நேரங்களில் குடிமகன்கள் இந்த மருத்துவமனை வளாகத்தை மது கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே இதனை தடுப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் இந்த புறநோயாளிகள் கட்டிடத்திற்கு அருகே ஆள் உயரத்திற்கு கோரைப் புல்கள் முளைத்து முட்புதர்கள் மண்டி இருப்பதால் இதில் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷ ஜந்துக்கள் இருந்தது. இதனால் நோயாளிகள் பெரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே இந்த முட்புதர்களையும் அகற்ற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில்இதுகுறித்து மருத்துவமனையின் டீன் விஜயகுமாரிடம் கேட்டபோது, இந்த மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளில் உதவியாளர்களாக வரும் சிலர் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் மது அருந்தும் சம்பவம் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு வெளியில் இருந்து சிலர் உள்ளே சுவரேறி குதித்து வந்து மது அருந்தும் நிலையும் இருந்து வருகிறது.எனவே இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுமட்டுமன்றி முட்புதர்களையும் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்