×

திருவாரூர் நகர பகுதியில் கால்நடைகளை சாலையில் திரியவிட்ட 3 பேர் கைது

திருவாரூர், நவ.1: திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூர் நகரினை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் நகரில் தற்போது பெய்து வரும் மழையையொட்டி வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள், குதிரைகள் உட்பட அனைத்து கால்நடைகளும் தெருக்களில் சுற்றித் திரிவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் திருவாரூர் பஜன மட தெருவை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் சுந்தர் (32) என்பவர் கடந்த 27 ந் தேதி திருவாரூர் புதுத்தெருவில் குறுக்கே பசு மாடு ஒன்று வந்து விடவே எதிர்பாராத விதமாக அதன் மீது பைக் மோதியதில் இறந்தார். இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று முன்தினம் வெளியானதையடுத்து நகரில் சுற்றி திரிந்த மாடுகள் நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடித்து பழைய பேருந்து நிலையம் உட்பட நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அடைக்கப்பட்டது. இந்நிலையில் தங்களது மாடுகளை உரிய முறையில் பராமரிக்காமல் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி திருவாரூர் ஆறுமுகநாடார் தோட்டத்தை சேர்ந்த ஆனந்த் (50), நெய்விளக்குதோப்பு பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி (50) மற்றும் மருதப்பட்டினத்தை சேர்ந்த பிளம்பர் மாரிமுத்து (50) ஆகிய மூவரும் டவுன் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.இந் நிலையில் இதுபோன்று நகரில் கால்நடைகளை சுற்றிதிரியவிடாமல் தங்களது சொந்த இடத்தில் வைத்து உரிமையாளர்கள் பாதுகாக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிடில் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு எச்சரித்துள்ளார்.


Tags : persons ,town ,Thiruvarur ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...