×

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மின் கம்பத்தின் ஸ்டே வயரில் மின்சாரம் பாய்ந்து மாடு பலி

ஆவடி, நவ. 1: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2வது செக்டர், 6வது பிளாக்கில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தெருக்களில் வீடுகளுக்கு மின் சப்ளை கொடுப்பதற்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே தெருக்களில் உயரழுத்த மின்கம்பங்களும் செல்கிறது. இவ்வாறு அதே பகுதி  தனியார் பள்ளிக்கூட சாலையில் ஒரு உயர் அழுத்த மின் கம்பத்தில் இருந்து ஸ்டே வயர் பூமியில் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பம் அருகே வீடுகளுக்கு மின்  இணைப்பு கொடுக்கும் மின்சார கம்பம் குறைவான உயரத்தில் அமைந்துள்ளது.    இந்த கம்பத்தில் இருந்து இணைக்கப்பட்ட மின் வயர்கள், ஸ்டே வயர் மீது உரசி கொண்டு இருந்து உள்ளது. இதனால் உயரழுத்த மின்சார கம்பத்தில் ஸ்டே  வயரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்த விவரம் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மக்களுக்கு தெரிந்ததால் அதே பகுதியில் உள்ள ஒரு சமூக ஆர்வலர் உடனடியாக ஆவடியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளார். ஆனால்  அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு இரவு வரை வந்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை மின்கம்பத்தில் ஸ்டே வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒரு பசு மாடு இறந்து கிடந்தது. அதன் அருகிலேயே  பத்துக்கும் மேற்பட்ட பெருச்சாளிகளும் இறந்து கிடந்தன. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பிறகு மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு  தகவல் கொடுத்தனர். அதன் பிறகு நேற்று காலை 8.30 மணி  அளவில் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.  அதன் பிறகு அவர்கள் மின் வயரில் உரசிய ஸ்டே வயரை துண்டித்தனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து ஆவடி போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : apartment ,Avadi Housing Board ,
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...