×

நிலத்திற்கு பட்டா கோரும் விவகாரம் மாவட்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை, நவ. 1: பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி கோயிலின் பரம்பரை தர்மகர்த்தா சூர்யபிரகாசம் என்பவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்ட அலுவலர் மற்றும்  பூந்தமல்லி  தாசில்தார் ஆகியோருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில்,  தங்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் வக்கீல் பரந்தாமன் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடும்போது, பூந்தமல்லி வைத்தீஸ்வரன்  கோயிலுக்கு சொந்தமான நிலம் என்று மனுதாரர் கூறும் நிலம் அரசு கிராம நத்தம் வகைபாட்டில் உள்ளது.

அரசின் எல்லா ஆவணங்களிலும் இது கிராம நத்தம் என்றே பதிவாகியுள்ளது. இந்த இடத்தில் பலர் பல ஆண்டுகாலமாக தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறார்கள். எனவே, இது கோயில் நிலம் என்பதற்கான எந்த ஆவணங்களையும்  தர்மகர்த்தா தாக்கல் செய்யவில்லை. இந்த இடத்தில் வசிக்கும் எங்களை வழக்கில் பிரதிவாதியாக சேர்க்காமல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே, பூந்தமல்லி பகுதியில் இந்த நிலத்தில் வசிக்கும் கேசவன் உள்ளிட்ட 20கும் மேற்பட்டோரை  வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கவேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘பிரச்னைக்குரிய நிலம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பூந்தமல்லி தாசில்தார் ஆகியோர் விசாரணை நடத்தாமல்  பட்டா வழங்க கூடாது. கோயில் தர்மகர்த்தா மற்றும் அங்கு குடியிருக்கும் கேசவன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Tags : district collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...