×

விருத்தாசலம் அருகே ஏரியின் கரை உடைந்தது 500 ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கியது

விருத்தாசலம், நவ. 1: மங்கலம்பேட்டை அருகே ஏரியில் ஏற்பட்டுள்ள கரை  உடைப்பை தென்னை மரங்கள், மண் மூட்டைகள் கொண்டும் கரைகளை கட்டும்  முயற்சியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் ஊராட்சியில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அருணாச்சல பிள்ளை பாசன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பாசனம் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும்  மேற்பட்ட ஏக்கரில் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவ மழை இல்லாததால்,  ஏரியில் தண்ணீர் நிரம்ப வில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் அருணாச்சலம் பிள்ளை ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  ஏரியில் தண்ணீர் பிடிப்பு அதிகமானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், ஏரியின்  கரைகள் போதிய வலுவில்லாமல் இருந்ததால், கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளம் போல் கரைபுரண்டு வெளியே ஓடுகிறது. மேலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால்,  அருகிலுள்ள 500 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு இருந்த உளுந்து, கம்பு, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்குவதும், அடித்து  செல்லப்படுவதுமாக உள்ளது.

இதனால் வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்குவதை கண்ட  அப்பகுதி,  விவசாயிகள் தங்களின் முயற்சியில் அருணாச்சலம் பிள்ளை ஏரியில் உள்ள கரை உடைப்பை தென்னை மரங்கள், மண் மூட்டைகள் கொண்டும் கரைகளை கட்டும்  முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்து அளவு தண்ணீரில் நின்று கொண்டும்,  முட்புதர்கள், விஷ ஜந்துகள் உள்ளிட்டவைகளுக்கு அஞ்சாமல் தங்களின் நிலங்களை பாதுகாக்கவும், நீர் ஆதாரம் கொண்ட ஏரியின் தண்ணீரை வெளியே செல்லாமல் இருக்க தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.  பல கட்ட முறையில் சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் கூறியும், ஏரியை தூர் வாராமலும், கரையை பலப்படுத்தாமலும் இருப்பது மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும்  ஏரியில் உள்ள மரங்களை ஏலம் விடுவதற்கு முனைப்பு காட்டும் ஊராட்சி நிர்வாகம்,  தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் ஏரியை தூர்வாரமல், கரையை பலப்படுத்தாமல் இருப்பதால், அனைத்து விளைச்சலும் முழுவதும் அழிந்து  விட்டதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அருணாச்சல பிள்ளை ஏரியில் நிரம்பி உள்ள தண்ணீரை கட்டுப்படுத்தி,  தங்களின்  விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் தற்போது போராடி வரும் நிலையில்,  விவசாயிகளை பாதுகாக்க அரசு போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு வீணாக செல்லும்  தண்ணீரை கட்டுப்படுத்தி, கரை அமைத்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : lake shore ,land ,Virtachalam ,
× RELATED வேலூர் பாலாற்றுக்கரையில் பலத்த...