×

ஆற்றில் அடித்து செல்லப்படும் ஆகாய தாமரைகள்

கடலூர், நவ. 1:  கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. நேற்று ஏரி, குளங்களில் வளர்ந்து கிடந்த ஆகாய தாமரைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. கள்ளக்குறிச்சி வட்டம் சங்கராபுரத்தில் உற்பத்தியாகும் கெடிலம் ஆறு விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. புராணங்களில் கெடிலம் ஆறு புண்ணிய  நதியாக போற்றப்படுகிறது. ஆனால் தற்போது ஆலை மற்றும் நகராட்சி கழிவுகளால் ஆறு மாசடைந்துள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் குளம் குட்டை வாய்க்கால்களில் வளர்ந்து கிடந்த ஆகாய தாமரைகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு கெடிலம் ஆற்றை அடைந்தன. இதனால் கடலூர் கடற்கரையில் கலக்கும் கெடிலம் ஆற்றில் ஆகாய  தாமரைகள் அதிக அளவில் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.  வெள்ள காலங்களில்தான் ஆகாய தாமரைகள் அடித்துச்செல்லப்படும். ஆனால் தற்போது இரண்டு நாள் மழைக்கே ஆற்றில் ஆகாய தாமரைகள் அடித்துச்செல்லப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : River ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை