×

வீராணம் ஏரியின் உபரி நீரை வெள்ளாற்றில் திறந்து விட வேண்டும்

சேத்தியாத்தோப்பு, நவ. 1: வீராணம் ஏரியின் உபரி நீரை பாழ்வாய்க்காலில் திறந்து விடுவதை தடுத்து நிறுத்தி வெள்ளாற்றில் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி. இந்த  ஏரியின் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளின் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் ஏரியின் தண்ணீரை கொண்டுதான் பரிபூரணநத்தம், பூதங்குடி, வெய்யலூர், வடபாக்கம், ஒடாக்கநல்லூர், நார்த்தங்குடி,  வாழக்கொல்லை, தென்பாதி, கூளாப்பாடி, விருதாங்கநல்லூர், கலியமலை உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெல், வாழை,  கருப்பு கரும்பு, உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இது தவிர சென்னைக்கு குடிநீருக்கும் சுத்திகரிப்பு செய்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது மூன்று நாட்களாக சேத்தியாத்தோப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் உபரி நீரை பாழ்வாய்க்காலில் திறந்து விடுவதால், பல கன அடி தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை நிறுத்தி வெள்ளாற்றில் திறந்து விட்டால் கிளாங்காடு, சென்னிநத்தம், மேட்டுத் தெரு, புதுத்தெரு, குறுக்குரோடு, உட்பட சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் வெள்ளாற்றில் போடப்பட்டிருக்கும் இரண்டு போர்வெல்களின்  நீர்மட்டம் உயரும் என்றும், குடியிருப்புகளில் உள்ள போர்வெல் மட்டமும் உயரும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து விடாததால் சிலர் குடிசைகளை போட்டு வைத்துள்ளனர். கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. எனவே, சிதம்பரம் கோட்ட பொதுப்பணி துறை செயற்ப்பொறியாளர் நேரடியாக ஆய்வு செய்து வீராணம் ஏரியின் உபரி நீரை வெள்ளாற்றில் திறந்த விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Veera Lake ,lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு