×

அரசு பள்ளி கட்டிடத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது

விருத்தாசலம், நவ. 1: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட சோழநகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.   இந்நிலையில், அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது. இது குறித்து அவ்வப்போது சம்பந்தப்பட்ட கல்வித்துறை நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையில் பள்ளி கட்டிடம் மழை நீரில் நனைந்து, அதனால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்தன. இதனால் நேற்று காலை வழக்கம் போல்  பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரியப்படுத்தினர்.  ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வந்து பார்த்தபோது வகுப்பறை முழுவதும் மேற்கூரைகள் பெயர்ந்து சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து மாணவ, மாணவிகளை அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் அமர வைத்து வகுப்பை நடத்தி  வருகின்றனர். சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : government school building ,
× RELATED சித்தூர் அடுத்த கங்காதரநெல்லூரில்...