×

அரசு டாக்டர்கள் போராட்டம் தீவிரம்

விழுப்புரம்,  நவ. 1: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள்  போராட்டம் தீவிர மடைந்துள்ளது. மழைக்காலத்தில் காய்ச்சல், சளியால் பலருக்கு  பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் குவிந்து  வருகிறது. அதேசமயம் காசுகொடுத்து வைத்தியம் பார்க்க முடியாமல் ஏழை, எளிய நோயாளிகள்   சிரமப்பட்டு வருகின்றனர். ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்யும்  டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். அரசு சேவை  டாக்டர்களுக்கு, முன்பிருந்த முதுநிலை படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை  கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  கடந்த 25ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் நேற்று
7 வது நாளாக தீவிர மடைந்துள்ளது.

இதனிடையே  நேற்றுமுதல் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் டாக்டர்கள்  வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவமனை  முன்பு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்சுந்தர் தலைமை  தாங்கினார். இதில், விழுப்புரம், முண்டியம்பாக்கம், செஞ்சி, திண்டிவனம்,  உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அரசு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  விழுப்புரம் அரசு மருத்துவ
மனையில் நேற்று 2 டாக்டர்கள் மட்டுமே  பணியிலிருந்ததால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். குறிப்பாக  புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நாற்காலிகள்  மட்டும்போடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி அரசு  தலைமை மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  டாக்டர்கள் மட்டும்  போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று தாலுகா  மருத்துவமனை டாக்டர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில்  பங்கேற்றதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனிடையே  தற்போது மழைக்காலங்களில் காய்ச்சலால் அதிகம்பேர் பாதிக்கப்பட்டு  மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால் டாக்டர்களின் வேலைநிறுத்தம் காரணமாக  சிகிச்சை பெறமுடியாமல் வீட்டிற்கு திரும்புகின்றனர். மேலும்  விழுப்புரம்  நகரில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் குவிந்து வருகிறது.  அரசு  மருத்துவமனைகளில் சிகிச்சைஅளிக்க யாரும் இல்லாததால், பெரும்பாலான மக்கள் பணம் கொடுத்து  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். அதேசமயம் ஏழை, எளிய நோயாளிகள் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற வசதியில்லாமல் பரிதவித்து வருகின்றனர். டாக்டர்களின் போராட்டம் மேலும்  சில நாட்கள் நீடித்தால் நோயாளிகளின் நிலை பரிதாபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே டாக்டர்களின் போராட்டதை முடிவுக்கு கொண்டுவர  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 32 டாக்டர்கள் 7 வது நாளாக பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர 7 டாக்டர்கள்  விடுமுறையில் உள்ளனர்.  இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 5 டாக்டர்கள் மட்டும் மருத்துவ பணியில் ஈடுபட்டனர். அதாவது பிரசவ வார்டு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் சிறப்பு வார்டு ஆகிய பகுதியில் மட்டுமே  டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். புற நோயாளி பிரிவில் உள்ள மருத்துவர்கள் அறை பூட்டப்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நீண்டநேரம் காத்திருந்து சிகிச்சை பெற முடியாமல்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.  இதனிடையே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை புறநோயாளி சிகிச்சை பிரிவு வளாகத்தில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் முத்துகுமார், வெங்கடேசன், மோகன்ராஜ், பழமலை, சரவணன், ஹரிபிரசாத் உள்பட 25 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கள்ளக்குறிச்சி  சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Government ,Doctors ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...