×

நாராயணசாமி கொடியேற்றுகிறார்

புதுச்சேரி,  நவ. 1: புதுச்சேரி விடுதலை நாள் விழாவையொட்டி முதல்வர் நாராயணசாமி  கடற்கரை காந்தி சிலை அருகே இன்று தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதையொட்டி  பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
 ஆண்டுதோறும் நவம்பர்  1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாட 2014ல் அரசாணை வெளியிட்டது.  அதன்படி இந்தாண்டு இன்று (1ம் தேதி) புதுச்சேரி விடுதலை நாளை கொண்டாட  கடற்கரை காந்தி சிலை அருகில் அரசு  சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மழையையும் பொருட்படுத்தாமல் பந்தல்கள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளின்  ஒத்திகை நடைபெற்றது.  இந்நிலையில் இன்று கடற்கரை சாலையில் காலை 9  மணிக்கு முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்ததும் தேசிய கீதம்  இசைக்கப்படுகிறது. பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை  முதல்வர் ஏற்றுக் கொள்கிறார். அதன்பிறகு முதல்வரின், விடுதலை திருநாள் உரை  இடம்பெறுகிறது. தொடர்ந்து காவலர்கள், தேசிய மாணவர் படையினர், பள்ளி  மாணவர்களின்  கண்கவர் அணிவகுப்பு மரியாதை இடம்பெறுகிறது.

 பின்னர் பரதம்,  காளியாட்டம், நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம் மற்றும் வீரவிளையாட்டு  உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இறுதியாக நாட்டுப்பண்  இசைக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள்,   எம்எல்ஏக்கள், விடுதலை போராட்ட தியாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.  அதைத் தொடர்ந்து சுற்றுலாத் துறை சார்பில் நேரு சிலை அருகே கைவினை  கண்காட்சி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “புதுச்சேரி வரலாறு” எனும் 2  நாள் புகைப்பட கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி திறந்து வைக்கிறார்.   அதன்பிறகு சட்டசபை சென்றடையும் முதல்வர் நாராயணசாமி அங்குள்ள வளாகத்தில்  தேசியக்கொடி ஏற்றி போலீசாரின் மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
  புதுச்சேரி விடுதலை திருநாளையொட்டி சீனியர் எஸ்பி (சட்டம்- ஒழுங்கு) ராகுல்  அல்வால் தலைமையில் கடற்கரை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்  பலப்படுத்தப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் இடத்தில் வெடிகுண்டு, மோப்ப நாய்   சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Tags : Narayanaswamy ,
× RELATED ராதாபுரம் அருகே காற்றாலையில் காப்பர் கம்பி திருட்டு