×

ஒதுக்கப்பட்ட இடங்களில் மக்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும்

புதுச்சேரி, நவ. 1:  புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் பங்கேற்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டுமென டிராபிக் எஸ்பி அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து எஸ்பி முருகவேல்  வெளியிட்ட செய்திக்குறிப்பில், விடுதலை நாள் விழாவிற்கான அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவர்கள் கடற்கரை சாலை வழியாக விழா திடலுக்கு வரவேண்டும். கார் அனுமதி பெற்ற வாகனங்கள் கிழக்கு பக்கம் அதாவது தலைமை செயலகம்  அருகே மற்றும் தெற்கு பக்கம் ஐஜிபி அலுவலகம் சந்திப்பு முதல் பழைய நீதிமன்றம் வரை வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் கொம்பாங்கி வீதி, ரோமன் ரோலண்ட் வீதி, புனித லூயி வீதிக்கு மேற்கு பக்கமாக நிறுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களை சுப்ரீன் வீதி பழைய ஆர்டிஓ அலுவலகம் தெற்கு பக்கம் வாகனங்களை  நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 விழாவில் பங்கேற்பவர்கள் கைப்பை, உணவுப்பொருட்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், கேமரா, செல்போன் போன்ற பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. காலை 8 மணிக்குள் தங்கள் இருக்கையில் இருக்க வேண்டும்.  8.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அழைப்பிதழ் வைத்திருந்தாலும் அனுமதி கிடையாது. பாதுகாப்பு கருதி முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் அனைத்தும் விழா நடக்கும் மைதானத்திலிருந்து வெளியேறிய பிறகு தான் பார்வையாளர்கள்  வெளியேற வேண்டும்.  நாளை (இன்று) காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 7.30 மணி வரையிலும் கடற்கரை சாலை, துமாஸ் வீதி, பாரதி பூங்கா, ஆளுனர் மாளிகை ஒட்டியுள்ள  பகுதிகளில் எந்தவித வாகனங்களும் நிறுத்தக் கூடாது. மாற்றாக புதுவை சட்டசபை மற்றும் பொது மருத்துவமனைக்கு மேற்கே உள்ள மூடப்பட்டுள்ள பெரிய வாய்க்காலின் மீது நிறுத்த வேண்டும். மற்றும் மற்ற சாலைகளின் மேற்கு  புறமாகவோ அல்லது தெற்கு புறமாகவோ வாகனங்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...