×

புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு உறுதியேற்போம்

புதுச்சேரி, நவ. 1:  புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு கவர்னர் கிரண்பேடி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் புதுவை மக்களுக்கு விடுதலை நாள் விழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கவர்னர் கிரண்பேடி:  புதுச்சேரியின் எல்லைக்குட்பட்ட கீழுர் கிராமத்தில் 1954ம் ஆண்டு  நவம்பர்1ம் தேதி அன்று நடைபெற்ற வாக்கெடுப்பின்படி இந்தியாவின் ஒரு அங்கமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் இணைக்கப்பட்டது. இந்தியாவுடனான  இணைப்பிற்கு பின்னரும், புதுச்சேரி மற்ற மாநிலங்களைவிட தனித்தன்மையுடன் திகழ்கிறது. மகான் அரவிந்தரும், மகாகவி பாரதியும் புதுச்சேரியை தமது வசிப்பிடமாக கொண்டு ஆன்மிகத்தையும், தேசியத்தையும் ஒருங்கே வளர்த்தனர்.  புதுச்சேரி ஆன்மிகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த பூமியாதலால் உலகெங்கும் உள்ள யாத்ரீகர்கள் இங்குள்ள புதுமையையும், ஆன்மீகத்தையும் நாடி வருகின்றனர். புதுச்சேரியின் விடுதலை நாளான இன்று, புதுச்சேரி மக்களுக்கு  நான் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மையான, பசுமையான மற்றும் நீர்வளம் நிறைந்த புதுச்சேரியை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து இந்நாளில் உறுதி ஏற்போம்.

சபாநாயகர் சிவக்கொழுந்து:  புதுச்சேரி விடுதலை நாளான நவம்பர் ஒன்றை நாம் மகிழ்ச்சியுடனும், நெஞ்சம் நிமிர்த்தியும் கொண்டாடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். புதுச்சேரி கீழுர் வாக்கெடுப்பின் மூலம் பிரான்ஸிடமிருந்து 1954  நவம்பர் 1ம் தேதி பெற்ற விடுதலை நாளே இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் ஒன்று கூடி பிரான்ஸ் ஆதிக்கத்திற்கு எதிராக ஓட்டளித்து, விடுதலை வேள்விக்கு, வெற்றி கனியைத் தந்திட்ட நாள் இது. இந்த  நன்னாளிலே, நமது புதுச்சேரி அரசு முழு ஒத்துழைப்பு தந்து, நமது மாநிலத்தை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு உறுதி ஏற்போம். அதற்கான எல்லா முயற்சிகளுக்கும் தோள் கொடுப்போம், துணை நிற்போம். அனைவருக்கும் எனது  வாழ்த்துக்கள். அமைச்சர் நமச்சிவாயம்:  1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நம் இந்திய தேசம் சுதந்திரம் அடைந்தபோது பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் பெறாமல் இருந்தது. நம் மண்ணில் பிறந்த தேசப்பற்று மிகுந்த தன்னலமற்ற  தலைவர்களின் உணர்வுமிக்க போராட்டத்தினால் 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி புதுச்சேரி மாநிலம் சுதந்திர இந்திய தேசத்துடன் இணைந்தது.

 புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என்று வர்ணித்த பண்டித ஜவகர்லால் நேரு பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி நம் புதுச்சேரி மாநிலத்தை இந்திய தேசத்துடன் இணைப்பதற்கு பேருதவி புரிந்தார். புதுச்சேரி  சுதந்திரத்திற்கு தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடிய நம் மண்ணில் அவதரித்த மாசற்ற மறவர்களின் தியாகங்களை இந்நாளில் போற்றி வணங்குவோம், தேச ஒற்றுமைக்கு வலு சேர்த்த புதுச்சேரி மாநிலத்தின்  தனித்தன்மையை என்றும் காத்திருப்போம். புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது இனிய விடுதலை திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்ஆர் காங்., கட்சி வெளியிட்ட வாழ்த்து செய்தி:  ஆகஸ்ட் 16ம் நாள் புதுச்சேரியின் விடுதலை நாளாக நாம் இதற்கு முன் கொண்டாடி வந்தோம். அறுபது ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த வரலாற்று பிழையை நீதியரசர் தாவீது அன்னுசாமி  தலைமையில் குழு அமைத்து சரி செய்து நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியின் விடுதலை நாளாக நேர்படுத்தியது முன்னாள் முதலவர் ரங்கசாமிதான் என்பதை இந்த தருணத்தில் பாராட்ட வேண்டும்.

 விடுதலை போராட்டங்களில் ஈடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் நன்றியோடு வணங்கி, அவர்கள் சிந்திய கண்ணீரும், செந்நீரும் புதுச்சேரி வளர்ச்சிக்கு அடியுரமாக பரவி வாழ்த்தி கொண்டிருக்கின்றன. புதுச்சேரி  விடுதலை நாளை கொண்டாடும் இந்த வேளையில் தியாக மறவர்களை வணங்கி மகிழ்கிறோம்.

Tags : state ,Puducherry ,
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...