என்.ஆர் காங்கிரஸ் கதை முடிந்துவிட்டது

புதுச்சேரி, நவ. 1:  புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர்  நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார், முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், காங்கிரஸ் துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து  கொண்டனர். கட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: இந்திராகாந்தி நாட்டை வல்லரசாக்கவும், வளர்ச்சியடைந்த நாடாக மாற்றவும் அரும்பாடுபட்டவர். நாட்டிலேயே தீவிரவாதத்துக்கு இரையான கட்சி காங்கிரஸ் தான். இந்திரா, ராஜீவ்காந்தி  தீவிரவாதத்துக்கு இரையாகியுள்ளனர். இதுபோல மற்ற கட்சி தலைவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார்களா? தற்போது மத்தியிலும், பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. அவர்கள் நாட்டுக்காக என்ன செய்துள்ளார்கள்.  தென்னிந்தியாவில் பாஜகவை மக்கள் அதிகம் புரிந்து கொண்டுள்ளனர். வைத்திலிங்கம் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நினைத்தேன். ஆனால் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தோற்றதில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் கதை முடிந்து விட்டது. காமராஜர் நகர் தொகுதியில் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்  ஜான்குமார் வெற்றி பெறுவார் என நினைத்தேன்.

 ஆனால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளார். பாராளுமன்ற தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை அவர் பெற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் தான் நன்மை கிடைக்கும் என மக்கள்  நம்புகிறார்கள்.  மக்களுக்கு நன்மை செய்ய வேண்டிய கடமையும், ெபாறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. செய்ய தயாராக இருந்து, இரவு பகல் உழைத்தாலும் இலவச அரிசி உள்பட அனைத்து திட்டங்களையும் கவர்னர் தடுத்து நிறுத்துகிறார்.  மத்திய அமைச்சர்களை சந்தித்து நிதி கேட்டால், இவர் சென்று தரக்கூடாது எனக்கூறி நிறுத்துகிறார். ஏனாமில் உள்ள ஒரு தீவை ஆந்திராவிற்கு கொடுக்க முயற்சிக்கிறார்.  எதிர்க்கட்சி தலைவர் 3 ஆண்டுகளாக தூங்கி எழுந்தவுடன் ஆட்சி மாற்றம் வரும் என்கிறார். இன்னும் 5 ஆண்டுகளுக்கும் அவர் அதையேதான் கூறிக்கொண்டு இருக்க வேண்டும். மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவினர்  கூறியது போல் அவர்கள் இடங்களை பெறவில்லை. இதன் மூலம் பாஜகவுக்கு சரிவு காலம் தொடங்கி விட்டது. இனி பாஜகவை மக்கள் நம்ப தயாராக இல்லை. பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின்  தலைமை பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும். கட்சியை வலுப்படுத்தி அவர், இந்திராவின் கனவை நனவாக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுகிறது. 90 நாளில் ரூ.10 ஆயிரம் கோடி ஆப்பிள் வீணாகியுள்ளது.  இதுபோன்ற நிலையில் ஐரோப்பா எம்பிக்களை காஷ்மீருக்குள் அழைத்து நாடகம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>